அலிகர் ரயில் நிலையம் வந்தவர்கள் சமூக விலகல் எதையும் பின்பற்றவில்லை.
ஹைலைட்ஸ்
- உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் ரயில் நிலையத்தில் தொழிலாளர்கள் குவிந்தனர்
- சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால் அதிர்ச்சி
- செல்போனில் பதிவான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
Lucknow: உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் ரயில் நிலையத்தில் சமூக விலகல் எதையும் பின்பற்றாமல் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
அலிகர் மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பீகாரில் பல்வேறு செங்கல் சூளைகளில் பணி புரிந்து வருகின்றனர். அவர்கள் பீகார் செல்வதற்காக சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது. இதில் செல்ல அலிகர் ரயில் நிலையம் வந்தவர்கள் சமூக விலகல் எதையும் பின்பற்றவில்லை.
நூற்றுக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் முண்டியடித்துக் கொண்டு ரயில் நிலையத்தில் சென்ற காட்சி அதிர்ச்சி தருவதாக உள்ளது. கொரோனா குறித்து இவ்வளவு விழிப்புணர்வு செய்யப்பட்டும் அவர்கள் நெருங்கி அமர்ந்திருந்தனர்.
இன்னொரு வீடியோவில் வரிசையில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்துகின்றனர். ஆனால் அதை ஏதும் கேட்காமல் மக்கள் மீண்டும் சமூக விலகல் விதிகளை மீறிச் சென்றனர்.
இதுபற்றி ஹத்ராஸ் மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான பாஜகவை சேர்ந்த ரஜ்விர் திலெரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘கூட்டம் மிக மிக அதிகமாக இருக்கும் சூழலில், இடம் குறைவாக இருக்கும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். இந்த நிலைமையை சரி செய்வதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம்' என்று தெரிவித்தார்.
அரசு உயர் அதிகாரியான குல்தேவ் சிங் கூறுகையில், ‘இங்கிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 3 ரயில்களும் பீகாரின் கயா நகருக்கு செல்கின்றன. சமூக விலகலை நடைமுறைப்படுத்துவதற்கு போதிய நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.
ஆனால் தொழிலாளர்கள் ஏராளமான லக்கேஜ்களுடன் வந்திருக்கின்றனர். அவர்களது குழந்தைகளும் உடன் வந்துள்ளார்கள். இதனால் நிலைமை சற்று மாறியுள்ளது. ரயில்களில் நாங்கள் கிருமி நாசினி தெளித்திருக்கிறோம்' என்று தெரிவித்தார்.