This Article is From Mar 02, 2020

வன்முறை பீதி; வதந்திகளை நம்ப வேண்டாம் என டெல்லி போலீசார் அறிவுறுத்தல்!

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகக் கடந்த வாரம் டெல்லியில் நிகழ்ந்த பெரும் வன்முறையில், 46 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவம் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட பதற்றம் இன்னும் குறையாத நிலையில் நேற்று மீண்டும் டெல்லியில் வன்முறை நிகழ்வதாக வதந்திகள் பரவியது.

வன்முறை பீதி; வதந்திகளை நம்ப வேண்டாம் என டெல்லி போலீசார் அறிவுறுத்தல்

ஹைலைட்ஸ்

  • ஒரு சில பகுதிகளில் மீண்டும் வன்முறை நடப்பதாக பரவிய வதந்தி
  • மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தல்
  • டெல்லி வன்முறையில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
New Delhi:

டெல்லியின் தென்கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் எந்தவொரு வன்முறைச் சம்பவங்களும் நிகழவில்லை என்றும் சமூகவலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என டெல்லி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுபோன்று வதந்திகளைப் பரப்பியதாக ஒரு சிலரைக் கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகக் கடந்த வாரம் டெல்லியில் நிகழ்ந்த பெரும் வன்முறையில், 46 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவம் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட பதற்றம் இன்னும் குறையாத நிலையில் நேற்று மீண்டும் டெல்லியில் வன்முறை நிகழ்வதாக வதந்திகள் பரவியது. 

இதுதொடர்பாக டெல்லி காவல்துறை அதன் அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, டெல்லியின் தென்கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுவதாக சில ஆதாரமற்ற தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுபோன்ற வரும் தகவல்கள் அனைத்தும் வதந்திகள் தான். இதுபோன்ற வதந்திகளை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தொடர்ந்து, இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவோர் கணக்குகளை உன்னிப்பாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வன்முறை தகவல்கள் வந்ததை தொடர்ந்து, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனானது, திலக் நகர், நாங்லோய், சூரஜ்மல் ஸ்டேடியம், பதர்பூர், துக்ளகாபாத், உத்தம் நகர் மேற்கு மற்றும் நவாடா உள்ளிட்ட மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மூடியிருந்தது. பின்பு மீண்டும் அனைத்து நிலையங்களும் திறக்கப்பட்டன.

இதுதொடர்பாக டெல்லி காவல்துறை துணை ஆணையர் மீனா என்டிடிவியிடம் கூறும்போது, தற்போது நிலைமை சீராக உள்ளது. அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எங்களுக்குப் பல அழைப்புகள் வருகின்றன. ஆனால், அனைத்து அழைப்புகளும் போலியானவை என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து, மக்களுடன் நாங்கள் பேசி வருகிறோம். 

காதார் பகுதி, காடா காலணி, பாதார்பூர், எக்தா விஹார், துக்ளகாபாத் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து எங்களுக்கு அழைப்புகள் வந்தன. இந்த அனைத்து பகுதிகளில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. அந்த பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. தொடர்ந்து, மெட்ரோ ரயில் நிலையங்களும் இயங்கி வருகிறது என்று அவர் கூறினார்.

இதேபோல், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அதிஷி தனது ட்வீட்டர் பதிவில், தெற்கு டெல்லியில் வன்முறை நிகழ்வதாகப் பரவி வரும் தகவல்கள் போலியானது என்று பதிவிட்டுள்ளார். மேலும், இதுதொடர்பாக தனக்கு வாட்ஸ்ஆப் மெசேஜ்கள் வதிந்ததாகவும், இதுபோன்று பரவி வரும் வதந்திகள் பொய்யானது என்றும், தற்போது அமைதியான நிலைமையே உள்ளது போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

பாஜக எம்.பி கவுதம் காம்பீர் தனது ட்வீட்டர் பதிவில், டெல்லி மக்கள் அனைவரும் வதந்திகளை நம்ப வேண்டாம். அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

வன்முறை குறித்து விசாரிக்க டெல்லி காவல்துறை குற்றப்பிரிவின் கீழ் இரண்டு சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

.