This Article is From Feb 08, 2019

''ஏழை மக்களுக்கு எந்த வகையிலும் பலன் தராத பட்ஜெட்'' - திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

தமிழக பட்ஜெட் உரையை வாசித்த ஓ. பன்னீர் செல்வம் சங்கீத வித்துவான் பாடுவது போல திரும்ப திரும்ப சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தார் என்று ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.

''ஏழை மக்களுக்கு எந்த வகையிலும் பலன் தராத பட்ஜெட்'' - திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

இளைஞர்களுக்கான அறிவிப்பு ஏதும் இல்லை என்கிறார் ஸ்டாலின்

ஹைலைட்ஸ்

  • ''வருவாயை பெருக்கும் அறிவிப்புகள் ஏதும் இல்லை''
  • ''திவாலான கம்பெனியைப் போல தமிழக அரசு உள்ளது''
  • 'வட்டியை கட்டுவதில்தான் தமிழக அரசு ஆர்வம் காட்டுகிறது'

தமிழக பட்ஜெட் குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது-

தமிழக பட்ஜெட் உரையை வாசித்த ஓ. பன்னீர் செல்வம் சங்கீத வித்துவான் பாடுவது போல திரும்ப திரும்ப சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தார். 

ஏழை எளிய மக்களுக்கு எந்த வகையிலும் பயன்பட முடியாத ஒரு உதவாக்கரை பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது. வளர்ச்சிக்கு செலவு செய்ய வேண்டியதை வாங்கிய கடனுக்கு வட்டியை கட்டுவதில்தான் ஆர்வம் செலுத்துகிறது என்பதை இந்த பட்ஜெட் காட்டுகிறது. 

குறிப்பாக தமிழ்நாடே இன்று போராட்டக்களமாக இருக்கிறது. அதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்கான அறிவிப்புகள் இல்லை.

ஒருகோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் உள்ளனர். அவர்களுக்கு பலன் தரும் அறிவிப்புகள் ஏதும் இல்லை. சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் தமிழக அரசுக்கு இருக்கிறது. வருவாயை பெருக்குவதற்கான எந்தவொரு அறிவிப்பும் பட்ஜெட் இல்லை. ஏட்டுச் சுரைக்காயாக இந்த பட்ஜெட் உள்ளது.

பொருளாதாரத்தில் அரசு மிகப்பெரும் தோல்வியை அடைந்திருக்கிறது என்பதை இந்த பட்ஜெட் எடுத்துக்காட்டுகிறது. விவசாயிகளைப்பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை. நெல் கொள்முதலுக்கு குறைந்த விலை தான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

கரும்புக்கான ஆதார விலையை இந்த அரசு கொஞ்சம்கூட உயர்த்தவில்லை. நிதிநிலையை பொறுத்தவரையில் ஒரு திவாலான கம்பெனியைப் போல, இன்னும் ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் கொட நாட்டில் எப்படி கொள்ளையடித்தார்களோ அதேபோன்று தமிழ்நாட்டில் கொள்ளையடிக்க கூடிய நிலையில்தான் இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார். 
 

.