Budget 2019: சமீபகாலமாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் தம்பிதுரை.
ஹைலைட்ஸ்
- மத்திய பட்ஜெட்டால் தமிழகத்திற்கு பயனில்லை என்கிறார் தம்பிதுரை
- கூட்டணி குறித்து அதிமுக தலைமைதான் முடிவு செய்யும்
- வருமான வரி உச்ச வரம்பு ரூ. 5 லட்சம் போதாது
மத்திய பட்ஜெட்டால் தமிழகத்திற்கு நன்மை ஏதும் இல்லை என்று மக்களவை துணை சபாநயாகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தம்பிதுரை கூறியதாவது-
5 ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியால் தமிழகத்திற்கு பெரிய அளவில் நன்மை கிடைக்கவில்லை. பட்ஜெட்டில் கூறப்பட்டவை பாஜகவின் தேர்தல் அறிக்கையை போல் உள்ளன. ரூ. 5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது போதுமானதாக இல்லை.
ஏனென்றால், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ரூ. 8 லட்சம் என்பதை அளவுகோலாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அப்படியிருக்கையில் 8 லட்சம் வரைக்கும் வருமான வரி விலக்கு ஏன் வழங்கப்படவில்லை?
தமிழகத்தில் கூட்டணி குறித்து தலைமைதான் முடிவு எடுக்கும். தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு தம்பிதுரை கூறினார்.