This Article is From Jun 24, 2019

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை, பற்றாக்குறை தான் உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னை மக்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர். இதனிடையே குடிநீர் திட்டப் பணிகளுக்காக கூடுதலாக 200 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

மேலும், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரெயில்வே வேகன் மூலமாக கொண்டுவந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் நடத்தப்படும் என திமுக பொருளாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், கவிஞர் கண்ணதாசனின் 93-வது பிறந்த நாளையொட்டி சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, அரசியல் காழ்ப்புணர்வுடன் திமுகவும், திமுக தலைவர் ஸ்டாலினும் செயல்படுகின்றனர்.

சென்னையில் பெரும்பாலான தினங்கள் இருக்கும் துரைமுருகன், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்து வரக்கூடாது என்று கூறுகிறார். சென்னை மக்களுக்கு அவர் செய்யும் துரோகம். தண்ணீர் கேட்டு போராட திமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை.

9,000க்கும் மேற்பட்ட முறைகளாக 400க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் வழங்கி வருகிறோம். துணை முதல்வர் சொன்னது போல், தண்ணீர் என்பது பஞ்சம் இல்லை. பற்றாக்குறை தான் உள்ளது. அந்த பற்றாக்குறையை திறன்பட எப்படி ஒரு அரசு சமாளிக்கிறது என்பதை தான் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

.