INX Media Case- வெளிநாடு செல்லக் கூடாது, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் சிதம்பரத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.
INX Media Case- சிபிஐ (CBI) விசாரணை அமைப்பு தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா (INX Case) வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு (P Chidambaram) இன்று ஜாமீன் கொடுத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். பிணை கொடுப்பதற்கு முன்னர் நீதிமன்றம், சிபிஐ அமைப்பை சரமாரி கேள்விகளால் துளைத்தெடுத்தது.
இன்று நீதிமன்றத்தில் ஐ.என்.எக்ஸ் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம், “வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிதம்பரத்துக்கு 74 வயதாகிறது. சிதம்பரம் வயதான காரணத்தால், பல ஆரோக்கிய இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார். இந்த காரணங்களை வைத்துப் பார்க்கும் போது அவருக்கு பிணை கொடுக்கலாம் என்று நினைக்கிறோம்,” என்றது.
சிதம்பரம், நாட்டை விட்டு தப்பித்துச் செல்ல வாய்ப்புள்ளது என்று சிபிஐ சொன்ன குற்றச்சாட்டை ஏற்க மறுத்த நீதிமன்றம், “அப்படி நடக்க எந்த வாய்ப்பும் இருப்பதாக தெரியவில்லை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம் சிதம்பரம் தாக்கம் ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக சொல்கிறீர்கள். அதற்கான எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல், கடிதம் அல்லது போன் அழைப்பு என்று எந்த ஆதாரமும் இல்லை,” என்று தெரிவித்து நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
ஒரு லட்ச ரூபாய் பிணைத்தொகையில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்லக் கூடாது, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் சிதம்பரத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் 74 வயதாகும் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை அமலாக்கத்துறையினர் கடந்த புதன் கிழமை கைது செய்துள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது உள்துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்த ப.சிதம்பரம், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். அரசியல் பழிவாங்குதல் காரணங்களுக்காக தன்மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகையை சிபிஐ சமீபத்தில் தாக்கல் செய்தது. அதில், பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜியால் உருவாக்கப்பட்ட ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதியைப் பெற்றுத் தருவதற்காக சிதம்பரம் ரூ. 9.96 லட்சத்தை லஞ்சமாக பெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.