எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது.
Oslo, Norway: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமதுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவின் அண்டை நாடான எரித்தீரியாவுடன் அவர் மேற்கொண்ட அமைதி நடவடிக்கை காரணமாக அவருக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நோபல் பரிசுக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா - எரித்தீரியா இடையே மோதல் காணப்பட்டது. இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அண்டை நாடான எரித்தீரியா உடன் எத்தியோப்பிய பிரதமர் அமைதி நடவடிக்கை மேற்கொண்டார்.
இதற்காக அவர் சர்வதேச நாடுகளுடன் ஒத்துழைத்து செயல்பட்டார். அவரது தனிப்பட்ட முயற்சிகள்தான் அண்டை நாட்டுடனான சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
43 வயதாகும் அகமது கடந்த 2018-ல் எத்தியோப்பிய பிரதமராக பொறுப்புக்கு வந்தார். அதற்கு முன்பாக நாட்டில் இருந்த கொள்கைகளை மாற்றி அவர், சமூக மாற்ற நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.
பதவிக்கு வந்த 6 மாதத்திற்குள் அண்டை நாடான எரித்தீரியா கைதிகளை அமைதி முயற்சிக்காக விடுதலை செய்தார். இதுபோன்ற நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல்களை தவிர்த்தன.
அபி அகமதுவின் தந்தை முஸ்லிம். தாயார் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இளம் வயது முதலே அரசியல் ஆர்வம் மிக்கவரான அவர், தொழில்நுட்பத்திலும் பட்டம் பெற்றிருந்தார். தனது இளமைக்காலத்தில் ராணுவத்தில் சேர்ந்த அபி அகமது, ரேடியோ ஆப்பரேட்டராக பணியாற்றினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)