பொருளாதார வல்லுனர் அபிஜித் பானர்ஜி.
Stockholm: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி உள்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் வறுமையை ஒழிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொண்டது, அதற்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்ததற்காக அபிஜித்திற்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.
பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை வகுப்பதற்காக பானர்ஜி, எஸ்தர் டஃப்ளோ, மைக்கேல் க்ரீமர் ஆகியோருடன் கூட்டாக முயற்சி மேற்கொண்டிருந்தார். தற்போது இந்த மூவருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.
கொல்கத்தாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி, தனது கல்லூரிப்படிப்பை கொல்கத்தா கல்லூரிகளில் முடித்திருந்தார். மேற்படிப்புக்காக எம்.ஏ. பட்டத்தை டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அவர் பெற்றார். இந்தியாவில் பிறந்தபோதிலும் அவர் தற்போது அமெரிக்க குடிமகனாக உள்ளார்.
2019-ம் ஆண்டில் இயற்பியலுக்கான நேபால் பரிசு ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், டிடிர் குய்லாஸ் ஆகியோருக்கும், வேதியியலுக்கான நோபல் ஜான் பி. குட்னாஃப், ஸ்டேன்லி விட்டிங்ஹாம், அகிரா யோஷினோ ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டது.
மருத்துவத்துக்கான நோபல் பரிசு வில்லியம் கேலின், பீட்டர் ராட்க்ளிஃப், க்ரேக் செமன்சா ஆகிய 3 பேருக்கம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பீட்டர் ஹண்டேவுக்கும் வழங்கப்பட உள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமதுவுக்கும், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்ளோ, மைக்கேல் க்ரீமர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.