பிரதமர் சொன்ன ஒரு ஜோக் குறித்து பகிர்ந்து கொண்டார் Nobel laureate Abhijit Banerjee
New Delhi: 2019 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் (Nobel) பரிசு பெற்ற அபிஜிப் பானர்ஜி (Abhijit Banerjee), இன்று பிரதமர் நரேந்திர மோடியை (PM Narendra Modi) சந்தித்து விரிவாக பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினார். பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு நிருபர்களை சந்தித்தார் அபிஜித். அப்போது அவர், பிரதமர் சொன்ன ஒரு ஜோக் குறித்து பகிர்ந்து கொண்டார்.
“பிரதமருடன் இன்று நடந்தது ஒரு நல்ல சந்திப்பு. இன்று நாங்கள் பேச ஆரம்பிக்கும் போதே அவர் ஒரு ஜோக் சொன்னார். மோடிக்கு எதிரான கருத்தைச் சொல்ல ஊடகங்கள் உங்களைத் தூண்டி வருகிறது என்றார். அவர் தொலைக்காட்சிகளை உன்னிப்பாக பார்த்து வருகிறார். அவர் உங்களை உற்று கவனித்து வருகிறார். நீங்கள் என்ன செய்யப் பார்க்கிறீர்கள் என்று அவருக்குத் தெரியும். சர்ச்சைக்குரிய வகையில் நான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை,” என்று சந்திப்பின் தொடக்கத்திலேயே கூறினார் அபிஜித் பானர்ஜி.
சமீபத்தில்தான் அபிஜித் பானர்ஜி, இந்தியப் பொருளாதாரம், மந்தநிலையில் இருக்கிறது என்று கூறினார். இதனால், அவர் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் என்று கூறப்பட்டது.
இந்தியாவின் பொதுத் துறை வங்கிகள் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பினார் Banerjee
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில், வங்கித் துறையில் நிகழ்ந்து வரும் நெருக்கடி குறித்து கவலை தெரிவித்தார் அபிஜித், “வங்கித் துறை நெருக்கடி மிகவும் கவலை அளிக்கிறது. அது குறித்து உடனடியாக கறாரான நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்” என்றார்.
நிருபர்கள் அவரிடம், ‘மனிதவளக் குறியீட்டில் இந்தியா, உலக அளவில் பின் தங்கியிருப்பது' குறித்து கேட்டபோது, அவர், “அது குறித்து நான் எந்தவித கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை,” என முடித்துக் கொண்டார்.
சமீபத்தில்தான் அபிஜித் பானர்ஜி, இந்தியப் பொருளாதாரம், மந்தநிலையில் இருக்கிறது என்று கூறினார்
மோடியிடம் வேறு என்ன பேசப்பட்டது என்பது குறித்து பானர்ஜி, “இந்தியா குறித்து அவர் என்ன நினைக்கிறார்… அவரது சிந்தனையில் இந்தியா எப்படி இருக்கிறது என்பதை விளக்கினார். அரசின் கொள்கைகள் பற்றி சுலபமாக அறிந்து கொள்ளலாம். ஆனால், அதற்குப் பின்னர் இருக்கும் யோசனை பற்றி அறிந்து கொள்ள முடியாது. அதை நான் அறிந்தேன். பிரதமரே நன்றி. அது மிகவும் தனித்துவமான ஒரு அனுபவம்தான்,” என்று பிரதமர் மோடிக்குப் புகழாரம் சூட்டினார்.
மோடியும், சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “மனித வளர்ச்சி குறித்து அபிஜித்தின் எண்ணம் மிகவும் தெளிவாக தெரிகிறது. பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் விரிவாக உரையாடினோம். அவரது சாதனைகளைக் கண்டு இந்தியா பெருமை கொள்கிறது. அவரின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு வாழ்த்துகள்,” என்று பதிவிட்டார்.