கொடநாடு விவகாரம் தொடர்பாக சமீபத்தில் ஒரு ஆவணப்படம் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின
ஹைலைட்ஸ்
- கொடநாடு விவகாரத்தில் முதல்வர் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
- கொடநாடு விவகாரத்தை மக்கள் மறக்கமாட்டார்கள், தினகரன்
- தமிழக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள், தினகரன் பேச்சு
தற்போது நடந்து வரும் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளையை மக்கள் மறக்கமாட்டார்கள் என்று தமிழக அரசையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார் அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
கொடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்பு இருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சமீபத்தில் ஒரு ஆவணப்படம் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள், ‘முதல்வர் பதவி விலக வேண்டும்' என்று ஆளும் அதிமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழக அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ-ஜியோ முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் பிரதானம் பெற்றுள்ளது. ‘முதல்வரைப் பார்க்க அனுமதி அளிக்கப்பட வேண்டும்' என்று சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ‘என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். முதல்வரை சந்திக்க முடியாது' என்று ஆளும் தரப்பு உதாசீனப்படுத்தியுள்ளது. இந்த முரணால், ஒரு வாரத்துக்கும் மேலாக அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் தினகரன், ‘ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஆசிரியர்களுக்கும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் தான் பிரச்னை எழுந்துள்ளது. ஆனால், அது குறித்து இந்த அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவர்களை அழைத்துப் பேசி பிரச்னைக்கு உரிய தீர்வு காண அதிமுக அரசுக்கு எண்ணமில்லை.
இந்தப் போராட்டத்தால் கொடநாடு விவகாரம் மறக்கப்பட்டுவிடும் என்று சிலர் கனவு காண்கிறார்கள். இன்னும் எத்தனை விஷயங்கள் வந்தாலும், கொடநாடு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களை மக்கள் மறக்கமாட்டார்கள். தேர்தல் நேரத்தில் தங்களது ஜனநாயகக் கடமையைச் செய்து மக்கள் பதிலடி கொடுப்பார்கள்' என்று முதல்வருக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார்.