Mexico: மெக்சிக்கோ நாட்டின் அதிபராக பதவியேற்க உள்ள மேனுவல் லோபஸ் ஓபரேடர், ‘சுவர் கட்டுவேன் என்று கூறி எங்களை யாரும் மிரட்ட முடியாது’ என்று கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிரப்பு தெரிவிக்கும் விதத்திலேயே அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ‘மெக்சிக்கோவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கானவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். அவர்கள் குற்றவாளிகள். அவர்களைத் தடுக்க, மெக்சிக்கோ- அமெரிக்க எல்லையில் சுவர் கட்ட வேண்டும். அதற்கு மெக்சிக்கோ நாடே நமக்கு நிதி உதவி செய்யும்’ என்று தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், இதுவரை அவரது திட்டம் நிறைவேறவில்லை. மேலும், அமெரிக்கா- மெக்சிக்கோ நாடுகளுக்கு இடையிலான உறவிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி, லோபஸ் ஓபரேடரை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ மெக்சிக்கோ சென்று சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினார். அப்போது, எல்லையில் சுவர் எழுப்புவது குறித்து ஒரு சுமூக முடிவு எட்டப்படவில்லை. அதன் பிறகும் இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் இரு நாடுகளும் முரண்பாடான கருத்தையே கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் மெக்சிக்கோவின் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ள ஓபரேடர், ‘சுவர் எழுப்புவேன் என்று கூறி எங்களை யாரும் அச்சுறுத்த முடியாது. மெக்சிக்கோ ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்கப் போகிறது. அது அரசியல் தலையெழுத்தை மாற்றி எழுதும். இது எப்படி சாத்தியமாகும் என்றால், மெக்சிக்கோ வளர்ச்சியடைய உள்ளது. இங்கு வேலை வாய்ப்பு பெருக்கப்படும்’ என்று கூறியுள்ளார். வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி அவர் அதிபராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.