சமூக விலகல் போன்ற நடவடிக்கைகளை ஏற்கனவே செயல்படுத்தியுள்ளதாக நோக்கியா தெரிவித்துள்ளது
New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.50 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கையில் பல தளர்வுகளை மத்திய அரசு அனுமதித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் சென்னையில் 17 தொழிற் பேட்டைகள் செயல்பட மாநில அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொலைத் தொடர்பு கியர் உற்பத்தி ஆலையில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் ஆலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எத்தனை ஊழியர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டார்கள் என்கிற விவரத்தினை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், குறைந்தது 42 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வந்தவண்ணமுள்ளன. தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக விலகல் மற்றும் கேண்டீன் வசதிகளில் மாற்றங்கள் போன்ற நடவடிக்கைகளை ஏற்கனவே செயல்படுத்தியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊழியர்களின் பலத்தைக் கொண்டு மீண்டும் நிறுவனம் இயங்கத் தொடங்கும் என தான் நம்புவதாக நிர்வாகம் கூறியுள்ளது.
இதே போல கடந்த வாரம் தேசிய தலைநகர் டெல்லியில் ஓபோ(OPPO) தொழிற்சாலை தனது ஊழியர்கள் ஒன்பது பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து அந்நிறுவனம் தொழிற்சாலையின் இயக்கத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 6,387 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 170 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,337 பேர் உயிரிழந்துள்ளனர். 64,425 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 83,004 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.