This Article is From Sep 14, 2018

கைது செய்யப்படுவாரா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு?

மகாராஷ்டிர நீதிமன்றத்தின் சார்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர் டி. உமா மகேஷ்வர ராவ் உள்பட 14 பேருக்கு அரெஸ்ட் வாரன்ட் அனுப்பப்பட்டுள்ளது.

கைது செய்யப்படுவாரா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு?

கைது வாரன்டுக்கு பின்னணியில் பிரதமர் மோடியின் சதி இருப்பதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது

Hyderabad:

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் 14 பேர் மீது பிணையில் வெளிவர முடியாத கைது வாரன்டை மகாராஷ்டிர நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கடந்த 2010-ல் கோதாவரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பான போராட்டத்தில் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் ஈடுபட்டனர். அந்த சம்பவம் தொடர்பாக தற்போது கைது வாரன்ட் அனுப்பப்பட்டுள்ளது.

நந்தேத் மாவட்டத்தில் உள்ள தர்மாபாத் முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுப்பியுள்ள இந்த வாரன்டில் சந்திரபாபு நாயுடு, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.யு. ராவ், சமூக நலத்துறை அமைச்சர் ஜி. கமால்கர் மற்றும் 12 பேர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தடுப்பணை தொடர்பான வழக்கு விசாரணை 21-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைக்கு சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் ஆஜராகாவிட்டால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாபில் தடுப்பணை அருகே சட்டவிரோத கட்டிடங்களை மகாராஷ்டிர அரசு அமைப்பதாகவும், இதனால் கோதாவரி ஆற்று நீர் தெலங்கானா பகுதியில் இருந்து திருப்பி விடப்படும் என்று கூறி தெலுங்கு தேச கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அவருடன் 40 எம்.எல்.ஏக்கள் தடை செய்யப்பட்ட தடுப்பணை பகுதிக்குள் நுழைந்தனர். இதையடுத்து போலீசாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவருக்கு ஜாமீன் வழங்கப்படாத நிலையில், அவர் தனி விமானம் மூலம் ஐதராபாத்துக்கு சென்று விட்டார். அவருக்கு ஏன் அரெஸ்ட் வாரன்ட் அனுப்பப்படவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கில்தான் தற்போது அரெஸ்ட் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பதிலளித்துள்ள தெலுங்கு தேச கட்சி, சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான அரெஸ்ட் வாரன்டின் பின்னணியில் மோடி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ், அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜராவார் என்று தெரிவித்தார்.

.