This Article is From Aug 19, 2019

ஹிமாச்சலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் 24 பேர் பலி! - டெல்லிக்கு எச்சரிக்கை!

ஹிமாச்சல் பிரதேசத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில், நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் சிக்கித் தவிக்கின்றனர்.

கனமழை காரணமாக கங்கா மற்றும் யமுனா சங்கமத்தில் நீர் மட்டம் கடுமையாக உயர்ந்துள்ளது.

Chandigarh/Bengaluru:

வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து, பெய்து வரும் கனமழை காரணமாக ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை வரை மட்டும் சுமார் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 22 பேர் மாயமாகியுள்ளனர். யமுனா உள்ளிட்ட நதிகள் நிரம்பி வருவதால் டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தென் இந்தியாவின் கேரளா மற்றும் கர்நாடகத்தில் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால் உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரளாவில் இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரது உடல் கண்டெடுக்கப்படாலம் என்று கூறப்படுகிறது. கர்நாடகாவில் இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஹிமாச்சலில் ஏற்பட்ட கனமழையால் இதுவரை 2 நேபாளிகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேர் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். ஒரு வெளிநாட்டவர் உட்பட 25 சுற்றுலா பயணிகள் நிலச்சரிவில் சிக்கி உணவில்லாமல் தவித்து வருகின்றனர். 

நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாநிலத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். சிம்லா, பிலாசப்பூர், சோலான், குளு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துவிட்டனர். மற்றொரு பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். மேலும் சிலர் நிலச்சரிவிலும், வெள்ளத்திலும் சிக்கி உயிரிழந்தனர். சிலரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

பண்டோ, நாத்பா அணைகள் முழுவதும் நிரம்பியதால் அவை திறந்துவிடப்பட்டன.

சிம்லா மாவட்டம் முழுவதும் மழை காரணமாக பலத்த சேதம் அடைந்துள்ளது. மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. சிம்லா-கால்கா இடையேயான ரயில் பாதை வழித்தடத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால், ரயில் சேவை துண்டிக்கப்பட்டது. பிஸாஸ்பூர் மாவட்டம், நைனாதேவி நகரில் 360 மி.மீ. மழை பதிவானது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், சிம்லா உள்பட 4 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பஞ்சாப் மாநிலம், கன்னா நகரில் பலத்த மழை காரணமாக ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துவிட்டனர். குருதாஸ்பூர் மாவட்டத்தில் பியாஸ் நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 11 பேரை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ராணுவ வீரர்கள் மீட்டனர்.


 

.