This Article is From May 02, 2020

தொடர் சர்ச்சைகளை அடுத்து பொது வெளியில் தலைகாட்டிய வட கொரிய அதிபர் கிம்!!

கடைசியாக அதிபர் கிம், கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி பொதுத் தளத்தில் காணப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் என்ன செய்கிறார் என்கிற எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 

தொடர் சர்ச்சைகளை அடுத்து பொது வெளியில் தலைகாட்டிய வட கொரிய அதிபர் கிம்!!

தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி, வட கொரியாவின் தலைநகரான பியோங்யாங்கிற்கு அருகில் உள்ள சுன்சோன் பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • கிம்மின் உடல் நலம் பற்றி தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வந்தன
  • 3 வாரங்களாக கிம், பொதுத் தளங்களில் தலை காட்டவில்லை
  • தொழிற்சாலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கிம் பங்கேற்றார்
Seoul:

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், வெகு நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக அவர் பொதுத் தளத்தில் தலை காட்டியுள்ளார். தன் நாட்டில் ஒரு புதிய உர தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி அதிபர் கிம் திறந்து வைத்துள்ளதாக கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் (Korean Central news agency) தகவல் தெரிவித்துள்ளது. 

நேற்று இந்த தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி, வட கொரியாவின் தலைநகரான பியோங்யாங்கிற்கு அருகில் உள்ள சுன்சோன் பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 வாரங்களாக அவர் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார் என்றும், சிலர் அவர் இறந்திருக்கக்கூடும் என்றும் தெரிவித்து வந்தனர். 

கடைசியாக அதிபர் கிம், கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி பொதுத் தளத்தில் காணப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் என்ன செய்கிறார் என்கிற எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 
 

c8ihtlf

நேற்று தொழிற்சாலை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார் அதிபர் கிம்.

நேற்று தொழிற்சாலையைத் திறந்து வைக்கும்போது, சுற்றியிருந்தவர்கள் ஆரவாரமிட்டதாக சொல்லும் கேசிஎன்ஏ, நிகழ்ச்சிக்குப் பின்னர் தொழிற்சாலையின் உற்பத்தி பற்றி கிம் கேட்டறிந்தார் என்றும் தெரிவிக்கிறது. 

நிகழ்ச்சியின்போது கிம், தனது தாத்தா கிம் இல் சங் மற்றும் தந்தை கிங் ஜாங் இல் ஆகியோர் இந்த தொழிற்சாலை திறப்பு குறித்து அறிந்தால் மகிழ்ச்சியடைவார்கள் என்று உணர்ச்சித் ததும்ப தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. நிகழ்ச்சி குறித்தான புகைப்படங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

வட கொரியாவை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவர் அதிபர் கிம்மின் தாத்தாவான கிம் இல் சங். அவரின் பிறந்தநாள் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி. அந்த நாள் வடகொரியாவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். அப்போது அரசு சார்பில் பெரும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும். ஆனால், இந்த முறை அப்படிப்பட்ட எந்தக் கொண்டாட்டங்களிலும் கிம் பங்கேற்கவில்லை. இதுதான், அவரின் உடல்நலம் குறித்த கேள்வியை எழுப்பியது. குறிப்பாக அவர் ஏப்ரல் 11 ஆம் தேதிக்குப் பிறகு எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. 

சில நாட்களுக்கு முன்னர் தென் கொரியாவின் டெய்லி என்கே (Daily NK) என்னும் செய்தி இணையதளம், ‘கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி இதயம் சம்பந்தமான சிகிச்சை கிம்முக்கு அளிக்கப்பட்டது. தற்போது அவர் அந்த சிகிச்சையிலிருந்து தேறி வருகிறார்' என்று தகவல் வெளியிட்டது. கிம்முக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வந்த தகவலை தென்கொரிய மற்றும் சீன அரசுத் தரப்புகள் உடனடியாக மறுத்தன. 

கிம்மின் குடும்பத்தில் பலருக்கு இதயம் தொடர்பான கோளாறுகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. கிம்மின் தந்தையான கிம் ஜாங் இல், 2011 ஆம் ஆண்டு நெஞ்சு வலி காரணமாக காலமானது குறிப்பிடத்தக்கது. 

உலகிலேயே மிகவும் அதிக கட்டுப்பாடுகளும் ரகசியத்துடனும் இருந்து வரும் நாடு வட கொரியா. அந்நாடு அணு ஆயுத சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் ஐ.நா சபை அந்நாட்டுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

அப்படி இருந்தும் சீனாவின் உதவியோடு வட கொரியா தொடர்ந்து இயங்கி வருகிறது. கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரியா, அணு ஆயுதங்கள் குறித்து சோதனை நடத்தி வருவதை நிறுத்தும் நோக்கில் தொடர்ந்து கிம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்னரும் இதைப் போன்று, கிம் திடீரென்று தலைமறைவாகியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு, சுமார் 6 வாரங்களுக்கு அவர் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. அப்போதும் அவரின் உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. தொடர்ந்து அவர், 6 வாரங்கள் முடிந்த பின்னர் ஒரு ஊன்றுகோலுடன் பொதுத் தளத்துக்கு வந்தார். 


 

.