Delhi clashes: “பலதரப்பட்ட மக்களுடன் இரவு முழுவதும் நான் தொடர்பில் இருந்தேன். நிலைமை மிக மோசமாக உள்ளது"
ஹைலைட்ஸ்
- டெல்லி கலவரத்தால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்
- அதில் ஒரு போலீஸாரும் அடங்குவார்
- கெஜ்ரிவால் தனது கருத்தை ட்விட்டர் மூலத் தெரிவித்துள்ளார்
New Delhi: டெல்லியில் வடகிழக்குப் பகுதிகளில் நடந்து வரும் வன்முறைகளை மாநில போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் அழைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் சிஏஏ ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களால் இதுவரை 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒரு போலீஸாரும் அடங்குவார். இதைத் தொடர்ந்துதான் கெஜ்ரிவால், ராணுவத்தைக் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார்.
“பலதரப்பட்ட மக்களுடன் இரவு முழுவதும் நான் தொடர்பில் இருந்தேன். நிலைமை மிக மோசமாக உள்ளது. போலீஸ் எவ்வளவு முயன்றபோதும், அமைதியான சூழல் திரும்பவில்லை. எனவே, ராணுவம் உடனடியாக அழைக்கப்பட வேண்டும். பதற்றமான இடங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட வேண்டும். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுத உள்ளேன்,” என்று ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்துக்கு வெளியே, நேற்று ஜேஎன்யூ மற்றும் ஜாமியா மிலியா மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி கலவரத்துக்குக் காரணமானவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். அதிகாலை 3:30 மணி அளவில் மாணவர்கள் மீது டெல்லி போலீஸ், தண்ணீர் பீய்ச்சி அடிக்கவே அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.