சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே நேற்றைய தினம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதுதொடர்பாக நேற்றைய தினம் சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் இரு தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக பெரும்பலான இடங்களில் மிதமான மழை பெய்யும்.
கன மழையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாகை, தஞ்சை திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும் திருவள்ளூர், காஞ்சி, கடலூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இரு தினங்களுக்கு அநேக இடங்களில் இடைவெளி விட்டு மழை பெய்யும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. குறிப்பாக தாம்பரம், வண்டலூர் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 30 நிமிடங்கள் மழை செய்தது. பின்னர் நள்ளிரவில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.
தொடர்ந்து, இன்று அதிகாலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர், கோடம்பாக்கம், கிண்டி, போரூர், வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனிடையே, சென்னையில் பல்வேறு இடங்களிலும், அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. எனினும், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை, வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்தார்.
இதேபோல், தமிழகத்தில் பரவலாக நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், நாகை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. இந்த மழையால் கடந்த சில நாட்களாக நிலவிவந்த வெப்பம் தணிந்ததால் மக்கள் நிம்மதிப்பெருமூச்சுவிட்டனர். மழை, விவசாயத்திற்குப் பேருதவியாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்னனர்.