This Article is From Oct 16, 2019

ஒரு நாள் முன்னதாகவே தொடங்கியது வடகிழக்கு பருவமழை: வானிலை மையம் தகவல்!

கன மழையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

ஒரு நாள் முன்னதாகவே தொடங்கியது வடகிழக்கு பருவமழை: வானிலை மையம் தகவல்!

ஒரு நாள் முன்னதாகவே தொடங்கியது வடகிழக்கு பருவமழை - வானிலை மையம்

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இன்றே வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறும்போது, தென் இந்தியாவில் கிழக்கு திசையில் இருந்து ஈரப்பதம் மிக்க காற்று வீசுவதை அடுத்து பருவமழை தொடங்கி உள்ளது.

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றே தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா பகுதிகளில் வட கிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. 

தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் இரு தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக பெரும்பலான இடங்களில் மிதமான மழை பெய்யும். 

கன மழையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

நாகை, தஞ்சை திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும் திருவள்ளூர், காஞ்சி, கடலூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் இரு தினங்களுக்கு அநேக இடங்களில் இடைவெளி விட்டு மழை பெய்யும் என்று கூறியுள்ளார். 

வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் குமரி, மாலத்தீவு கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும்  எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள்ளதால், கடலில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்ற தகவலை அடுத்து முக்கிய துறைமுகங்களில்  எச்சரிக்கை கூண்டு 1, 2 ஏற்றப்பட்டுள்ளன.

 

.