ஹைதராபாத்தில் நடந்த போராட்டத்தின் போது, உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.
Hyderabad: தெலங்கானா மாநில போக்குவரத்து ஊழியர்கள் 26 கோரிக்கைகளை முன்வைத்து நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 9-வது நாளை எட்டியுள்ளது.
இந்த போராட்டத்தில் நேற்று தீக்குளிப்பில் ஈடுபட்ட ஸ்ரீனிவாஸ ரெட்டி, சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை, எந்த விதமான மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன் என முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்
தெலங்கானாவில் உள்ள அரசுப் பேருந்துக் கழக ஊழியர்கள் தங்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும், பேருந்துக் கழகத்தை அரசே ஏற்று நடந்த வேண்டும் உள்ளிட்ட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி தசரா பண்டிகைக்கு முன்பாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலைநிறுத்தத்தில் ஏறக்குறைய 48 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்றனர். தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் பேச வேண்டும் என்ற போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் நிராகரித்தார்.
தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும், அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதற்கு தனியாக குழு அமைக்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார். ஆனால், தங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதை முதல்வர் சந்திரசேகர் ராவ் ஏற்கவில்லை.
இதனையடுத்து, கடந்த சனிக்கிழமைக்குள் ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், 48 ஆயிரம் ஊழியர்கள் தாங்களாகவே தங்கள் பணியில்இருந்து விலகிக்கொண்டதாக எடுக்கப்பட்டு நீக்கப்படுவார்கள் என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.
ஆனால், போக்குவரத்து ஊழியர்கள் யாரும் பணிக்கு திரும்பாததால், 48 ஆயிரம் ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெலங்கானா அரசு அறிவித்தது.
போராட்டம் தீவிரமடைந்து வரும் இந்த சூழலில் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந் ஓட்டுநர் ஸ்ரீனிவாச ரெட்டி என்பவர் நேற்று ஹைதராபாத்தில் நடந்த போராட்டத்தின் போது, உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.
இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீனிவாச ரெட்டியை அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
தொழிலாளர்கள் அமைப்பு தரப்பில் கூறுகையில், " தெலங்கானா அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ததால் மனமுடைந்து ஸ்ரீனிவாச ரெட்டி தீக்குளித்தார்" என முதல்வர் மீது குற்றம்சாட்டுகின்றனர்.
ஸ்ரீனிவாச ரெட்டியின் சொந்த மாவட்டமான கம்மம் மாவட்டத்தில் பேருந்து மீது கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. சாலையில் செல்லும் அரசு பஸ்களை சிறைப்பிடித்தல், பஸ்களை அடித்து சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால் பதற்றம் நீடிக்கிறது.
.இது குறித்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவிடம் இன்று நிருபர்கள் கேட்டபோது, " போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுக்கே இடமில்லை. மீண்டும் அவர்கள் பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டார்கள். இதுபோன்ற போராட்டத்துக்கெல்லாம் நான் அச்சப்படமாட்டேன். சாலையில் செல்லும் பஸ்களை தடுத்தல், பணிமனைக்குள் நுழைந்து பஸ்களை சேதப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசு பார்த்துக்கொண்டிருக்காது கடும் நடவடிக்கை எடுக்கும்" எனத் தெரிவித்தார்.