This Article is From Nov 30, 2018

‘அயோத்யா வேண்டாம், கடன் தள்ளுபடி வேண்டும்!’- டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகள்

விவசாயக் கடன் தள்ளுபடி, விளை பொருட்களுக்கு சரியான விலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, தலைநகர் டெல்லியில் ஏராளமான விவசாயிகள் 2 நாட்களுக்கு போராட்டம் நடத்த உள்ளனர்

New Delhi:

விவசாயக் கடன் தள்ளுபடி, விளை பொருட்களுக்கு சரியான விலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, தலைநகர் டெல்லியில் ஏராளமான விவசாயிகள் 2 நாட்களுக்கு போராட்டம் நடத்த உள்ளனர். இன்னும் ஒரு சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், விவசாயிகள் இந்தப் போராட்டம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடதுசாரி அமைப்புகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் மூலம் குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லியில் மாபெரும் பேரணியை நடத்த திட்டமிட்டு வருகின்றனர். இன்று விவசாயிகள் நாடாளுமன்றத்துக்கு நடை பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதையொட்டி, 3500 போலீஸ் பாதுகாப்புக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து முக்கியமான 10 விஷயங்கள்:

  1. விவசாயிகள் மத்திய பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ரயில் மூலமாகவும், ட்ராக்டர் மூலமாகவும் டெல்லிக்கு வந்துள்ளனர்.
  2. டெல்லியின் ராம்லீலா மைதானம் விவசாயிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. சிவப்பு நிற தொப்பி அணிந்துள்ள விவசாயிகள், ‘அயோத்யா வேண்டாம், கடன் தள்ளுபடி வேண்டும்' என்று கோஷமிட்டு வருகின்றனர்.
  3. ஒடிசாவைச் சேர்ந்த விவசாயி பர்மார் ரிஷி, ‘3 ஆண்டுகளுக்கு முன்னர் நான் 3 லட்ச ரூபாய் கடனை நான் வாங்கினேன். அதை என்னால் எவ்வளவு முயன்றும் திரும்ப செலுத்த இயலவில்லை' என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
  4. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இன்னொரு விவசாயியான உர்மிலா நய்யா, ‘நாங்கள் எங்கள் நிலத்தில் விளைவிக்கும் காய்கறிகளை விற்க தகுந்த சந்தை இல்லை. காய்கறி, ஒரு கிலோ 1 அல்லது 2 ரூபாய்க்கு விற்றால் நாங்கள் எப்படி வாழ்வது' என்று நொந்து கொண்டார்.
  5. தமிழகத்தைச் சேர்ந்த 1200 விவசாயிகளும் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ளனர். அவர்கள், உயிரிழந்த 2 விவசாயிகளின் மண்டை ஓடுகளையும் கையில் வைத்துள்ளனர். இன்று நாடாளுமன்றத்திற்கு உள்ளே விவசாயிகள் அனுமதிக்கப்படவில்லை என்றால், உடலில் துணி இல்லாமல் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக அச்சுறுத்துகின்றனர்.
  6. கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி விவசாயிகள் இதைப் போன்ற ஒரு போராட்டத்தை நடத்திய போது, அவர்களுக்கும் போலீஸாருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த முறையோ, அரசு நிர்வாகத்திடம் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றனர் விவசாயிகள்.
  7. டெல்லியில் உள்ள 5 குருத்வாராக்கள், விவசாயிகளுக்கு அடைக்கலம் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், பெரும்பான்மையான விவசாயிகள் ராம்லீலா மைதானத்தில் தான் தங்குவர்.
  8. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களும், பல அமைப்பினரும் விவசாயிகளுக்கு உணவுப் பொட்டலம் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளன.
  9. விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் அவர்களுடன் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
  10. பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், விவசாயிகளின் இந்தப் போராட்டம் பாஜக-வுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

.