வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமா?
ஹைலைட்ஸ்
- வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமா?
- கவலைக்கிடமான நிலையில் இல்லை என தென்கொரிய அரசு வட்டாரங்கள் தகவல்
- சி.ஐ.ஏ மற்றும் தென் கொரிய உளவுத்துறையிடம் இது தொடர்பாக கேள்வி
Seoul, South Korea: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, கிம் ஜாங் உன் கவலைக்கிடமான நிலையில் இல்லை என தென்கொரிய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
வடகொரியாவின் மிக முக்கியமான நாளான அந்நாட்டின் தந்தை எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த தின கொண்டாட்டம் சூரியனின் நாள் என்ற பெயரில் ஆண்டு தோறும் நடைபெறும். இந்த விழாவில் அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொள்வது வழக்கம். ஆனால் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளவில்லை.
கொரோனா அச்சத்தால் அவர் பங்கேற்கவில்லை என்றும் தகவல் பரவியது. ஆனால், அந்நாட்டின் அரசு ஊடகம் இதுதொடர்பாக எந்த செய்தியும் வெளியிடவில்லை. கிம் கடைசியாக வெளியே தோன்றியது ஏப்ரல் 11-ம் தேதி ஆகும். கடந்த சில ஆண்டுகளாக கிம்-மின் உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் பரவிக்கொண்டே இருந்தன.
இந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. வட கொரிய விவகாரத்தை கவனிக்கும் அதிகாரிகளின் கூற்றை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க உளவுத்துறை இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.ஐ.ஏ மற்றும் தென் கொரிய உளவுத்துறையிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக சி.என்.என் தெரிவித்துள்ளது.
எனினும், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியதற்கு தென் கொரிய மறுப்பு தெரிவித்துள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)