ரஷ்யாவின் நிலைப்பாடு மிகத் தெளிவாக உள்ளதென்றும், அது மாறாது என்றும் ரஷ்ய துணைத்தூதர் தெரிவித்துள்ளார்.
New Delhi: காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்புவதற்கு விருப்பம் இல்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்வதற்கு பாகிஸ்தான், சீனா நாடுகள் சதி செய்து வரும் நிலையில் ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளது.
இது தொடர்பாக ரஷ்யாவின் துணைத் தூதர் ரோமன் பபுஷ்கின் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
காஷ்மீர் விவகாரத்தில் ரஷ்யாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. சிம்லா உடன்படிக்கை, லாகூர் உறுதிப்பாட்டின் அடிப்படையில் காஷ்மீர் தொடர்பாக எந்தவொரு பிரச்னை ஏற்பட்டாலும் அதனை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் ரஷ்யா உறுதியாக உள்ளது. இதனை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் கொண்டு செல்வதற்கு ரஷ்யா விரும்பவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப வேண்டும் என்று சீனா முன் மொழிந்தது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முட்டுக் கட்டையை ஏற்படுத்தின. இந்த நிலையில் ரஷ்ய தூதர் விளக்கம் அளித்திருக்கிறார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 370-யை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தின்போது நீக்கியது. இந்த விவகாரத்தை சர்வதேச அமைப்புகளில் எழுப்ப பாகிஸ்தானும், சீனாவும் சதி செய்து வருகின்றன. இருப்பினும் ஒவ்வொரு முறையும் இந்தியா இந்த சதியை முறியடித்து வருகிறது.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் காஷ்மீர் விவகாரம் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதத்தின்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மேலோட்டமாக பேசப்பட்டது. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)