மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய ரூ. 10 ஆயிரம் கோடி நிலுவையில் இருப்பதாக தம்பிதுரை கூறியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- தமிழகத்திற்கு வரவேண்டிய தொகை ரூ. 10 ஆயிரம் கோடி
- தூய்மை இந்தியா திட்டத்தால் பலன் இல்லை
- விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் வழங்க வேண்டும்
மத்திய அரசின் திட்டங்களால் பலன் ஏதுமில்லை என்று மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான தம்பிதுரை விமர்சித்துள்ளார்.
மக்களவையில் தம்பிதுரை இன்று பேசியதாவது-
நாட்டில் வேலை வாய்ப்பின்மை 6.1% அதிகரித்திருக்கிறது. இந்த அளவு கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம் ஆகும். மத்திய பாஜக அரசால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
5 ஆண்டுகளை பாஜக அரசு நிறைவு செய்யவுள்ள நிலையில், இந்த வேலை வாய்ப்பின்மை விகிதம் என்பது மிக மிக அதிகம். விவசாயிகளுக்காக ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
விவசாயிகள் மீது மத்திய அரசு கொண்டிருக்கும் அக்கறையை பாராட்டுகிறோம். ஆனால் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் என்பது அவர்களுக்கு போதுமானதாக இருக்காது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் வழங்க வேண்டும்.
மத்திய அரசிடம் இருந்து பல்வேறு நிவாரண நிதியாக ரூ. 10 ஆயிரம் கோடி வரவேண்டியிருக்கிறது. இதனை ஜெயலலிதா காலத்திலிருந்தே நாங்கள் கேட்டு வருகிறோம். மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கழிவறைகள் கட்டித் தரப்படுகின்றன.
எனது தொகுதியில் கிராமத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் கழிவறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி இருந்தால் அதனை எவ்வாறு பெண்கள் பயன்படுத்த முடியும்?
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட கழிவறைகளின் இலக்கை ஏறக்குறைய மத்திய அரசு எட்டி விட்டது. ஆனால் அவை பயன்படுத்தும்படியாக இல்லை. எது பார்வையில் தூய்மை இந்தியா திட்டத்தை தோல்வி அடைந்த திட்டமாகவே கருதுகிறேன்.
இவ்வாறு தம்பிதுரை பேசினார்.