This Article is From Mar 13, 2019

கொத்தடிமைக் கூலி, ஆள் கடத்தல்… ‘கஜா’ கோரத்தாண்டவத்தை அடுத்து நடக்கும் அவலம்! #Exclusive

கஜா நிவாரண நிதி பலருக்கு கொடுக்கப்பட்டு விட்டதாகவும், பிறருக்கு நிதி அளிக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் கூறுகிறது அரசு

ஒரு லட்சம் இலவச வீடுகள் கட்டித் தரப்படும் என்று அரசு தெரிவித்திருந்தாலும், இதுவரை எந்தவிதப் பணிகளும் ஆரம்பிக்கப்படவில்லை. 

Thanjavur, Tiruvarur:

நான்கு மாதங்களுக்கு முன்னர் தமிழக டெல்டா பகுதிகளில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா, 12 லட்சம் மரங்களை வேறோடு சாய்தது, 3 லட்சம் பேருக்கு வீடில்லாமல் செய்தது. மாதங்கள் கடந்த பின்னரும், அங்கிருக்கும் பெரும்பாலானோரின் நிலைமை பெரிதாக மாறவில்லை. இன்னும் சொல்லப் போனால், கொத்தடிமைக் கூலி, ஆள் கடத்தல் என்று நிலைமை நாளுக்கு நாள் சீரழிந்து கொண்டே போகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி கஜா புயல் வீசியதில் தஞ்சாவூர் மாவட்டம், சுரப்பாலம் பகுதியைச் சேர்ந்த சித்ரா, தனது கணவர் நடராஜனை இழந்தார். ஆனால், அவரது துயரம் அன்றோடு முடியவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தால், 10 வயதேயான தனது இளைய மகனை கடன் கொடுத்தவர், கொத்தடிமையாக அழைத்துச் சென்றுவிட்டதாக கண்ணீர் வடிக்கிறார் சித்ரா. நடராஜனின் இறுதிச் சடங்கிற்கும், தனது சிகிச்சைக்கும் 60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார் சித்ரா. அதைத் திருப்பி செலுத்த முடியாத போதுதான் மகனை கொத்தடிமையாக இழக்க நேரிட்டது. அதிர்ஷ்டவசமாக, அந்த 10 வயது சிறுவன் மீட்கப்பட்டு, தற்போது சிறுவர்களுக்கான இல்லத்தில் இருக்கிறார்.

கஜா புயலின் தாக்கத்துக்குப் பிறகு, வேலை கிடைப்பது மிகவும் சிரமாகிவிட்டதாக கூறும் சித்ரா, தனது 4 குழந்தைகளை சரிவர பார்த்துக் கொள்ள முடியாமல் சிரமத்தில் இருக்கிறார். “என்னால் கண்டிப்பாக கடனைத் திருப்ப செலுத்த முடியாது. ஆகவேதான், எனது மகனை ஆடு மெய்க்க கொத்தடிமையாக அழைத்துச் செல்லப் பார்த்தார்கள். நான் என் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு உரிய கல்வியைக் கொடுக்க வேண்டும்” என்று குமுறுகிறார்.

rg521ioo

சுரப்பாலத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அம்பட்டன் கொல்லையில் இருக்கும் இன்னொரு விதவைப் பெண், ராஜாத்தி, நவம்பர் முதல் வீடு இல்லாமல் தவித்து வருகிறார். புயலின்போது விழுந்த கூரை வீட்டை, சரி செய்ய அவரிடம் சுத்தமாக பணமில்லை. இதனால், சிதிலமடைந்த அவரது வீட்டிலிருந்து அருகில் இருக்கும் மாட்டுக் கொட்டகையில் வசித்து வருகிறார் ராஜாத்தி. அங்கு அவரால் காலை கூட சரியாக நீட்ட முடியவில்லை.

அங்கிருந்து சில தெருக்கள் தள்ளி, வேதநாயகி, படுத்த படுக்கையாக இருக்கிறார். கஜா புயலின்போது வேதநாயகியின் காலில் மரம் விழுந்து பெரிய காயத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அந்த காயம் மோசமடைந்து கொண்டே போனாலும், மேல் சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் அமைதியாக இருக்கிறார். “எங்களுக்கு வேறு வழியே இல்லை. அரசுதான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் செல்லக் கூட எனது குடும்பத்திடம் பணம் இல்லை” என்று தனது வேதனையைப் பகிர்ந்து கொள்கிறார்.

ராஜாத்தி, தற்போதைய நிலைமை குறித்து கூறுகையில், “இதுவரை எங்களை யாருமே வந்து பார்க்கவில்லை. நாங்கள் இந்த முறை யாருக்கும் ஓட்டு போட மாட்டோம்” என்று கொதிக்கிறார்.

வட்டாச்சி கோட்டையில் விவசாயி தனவேந்திரன், திகைத்துப் போய் அமர்ந்துள்ளார். அவர் வைத்திருந்த தென்னை நாறு ஃபேக்டரியையும் 400 தென்னை மரங்களையும் கஜா புயல் ஒரே நாளில் இல்லாமல் ஆக்கிவிட்டது. இப்போது அரசின் உதவியை எதிர்பார்த்து செய்வதறியாமல் இருக்கிறார்.

“பொருளாதார ரீதியில் நாங்கள் 15 ஆண்டுகள் பின் தங்கவிட்டோம். எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. அரசு எதாவது எங்களுக்குச் செய்தால் மட்டும்தான் நாங்கள் பிழைப்போம்” என பொங்குகிறார்.

வழக்கறிஞரும் விவசாயியுமான பாலசுப்பிரமணியன், “விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் வட்டியில்லா கடன் கொடுக்கப்பட வேண்டும்” என்று தீர்வு சொல்கிறார்.

நிலைமை இப்படி இருக்கையில், கஜா நிவாரண நிதி பலருக்கு கொடுக்கப்பட்டு விட்டதாகவும், பிறருக்கு நிதி அளிக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் கூறுகிறது அரசு. அதேபோல, ஒரு லட்சம் இலவச வீடுகள் கட்டித் தரப்படும் என்று அரசு தெரிவித்திருந்தாலும், இதுவரை எந்தவிதப் பணிகளும் ஆரம்பிக்கப்படவில்லை.

.