என்னைப்பற்றி அவதூறு பரப்புவோர் மீது எனக்கு வெறுப்பு கிடையாது என்று அமித் ஷா கூறியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- அமித் ஷாவின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளியானது
- தான் ஆரோக்கியத்துடன் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்
- தனது நலனில் அக்கறை கொண்டவர்களுக்கு அமித் ஷா நன்றி தெரிவித்தார்.
New Delhi: தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும், முழு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பல்வேறு அமைச்சரவைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படங்களில் அமித் ஷா சோர்வாக இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இவ்வாறான புகைப்படங்களைக் கொண்டு, அமித் ஷா எதிர்ப்பாளர்கள் அவருக்கு நோய் ஏற்பட்டு விட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்ப விட்டனர். அதேநேரம் அமித் ஷாவும் காணொலி வாயிலாக பேட்டி அளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உடல்நிலை குறித்த சர்ச்சைகளுக்கு அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், 'எனது உடல்நிலை குறித்து பலரும் ட்வீட் செய்திருந்தார்கள். நான் சாக வேண்டும் என்று சிலர் விருப்பம் தெரிவித்திருந்தனர்' என்று கூறியுள்ளார்.
ட்விட்டர் பதிவுடன் கடிதம் ஒன்றையும் அமித் ஷா இணைத்துள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது-
எனது உடல்நிலை குறித்த வதந்திகளில் நான் கவனம் செலுத்தவில்லை. ஒரு உள்துறை அமைச்சராக நான் எனது பணியில் ஆர்வம் காட்டினேன். எனது உடல்நிலை குறித்து லட்சக்கணக்கான பாஜகவினர் கவலை தெரிவித்தனர். இதனால்தான் நான் விளக்கம் அளிக்க வேண்டிய சூழலுக்கு ஆளானேன்.
என்னைப்பற்றி பேசுவதை விட்டு விட்டு அவரவர் பணிகளை கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எனது உடல் நலனில் அக்கறை செலுத்தி, நலம் விசாரித்தவர்களுக்கு நன்றி. என்னைப்பற்றி அவதூறு பரப்புவோர் மீது எனக்கு வெறுப்பு கிடையாது.
இவ்வாறு அமித் ஷா பதிவிட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.