This Article is From Jun 26, 2019

தமிழகத்தில் அடிமை அரசு தான் நடைபெறுகிறது: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு

தமிழகத்தை ஆட்சி செய்யும் அதிமுக அரசு, ஊழல் அரசு என்றும் பாஜகவின் அடிமை அரசு என்றும், மக்களவையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் அடிமை அரசு தான் நடைபெறுகிறது: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு

அடிமைகளை கவனித்துக்கொள்வது எஜமானரின் கடமை என தயாநிதி கடும் விமர்சனம்

New Delhi:

மக்களவையில், நேற்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழகத்தில் உள்ள மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் அக்கறை, ஆளும் உங்கள் கூட்டணி அரசான அதிமுகவுக்கு இல்லை என குற்றம்சாட்டினார். 

மேலும், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்காக அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 8 வருடங்களாக, தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசு, சரியான திட்டத்தை செயல்படுத்தி இருந்தால், இந்த நிலைமை வந்திருக்காது. ஒரு மோசமான ஊழல் மிகுந்த அரசு தமிழகத்தில் செயல்பட்டுவருகிறது என்று அவர் கூறினார். 

தமிழகத்தில் மக்கள் நலனுக்கான ஒரு அரசு செயல்படவில்லை. ஒரு அடிமை அரசாகத்தான் இருக்கிறது. அதனால்தான் தலைமை செயலகத்தில் நுழைந்து சோதனை நடத்துகின்றனர் என்று அவர் சாடினார்.

இதற்கு மக்களவையில் இருக்கும் ஒரே ஒரு அதிமுக எம்.பி எதிர்ப்பு தெரிவிக்க, அவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியான பாஜக எம்.பிக்களும் கோஷம் எழுப்பியதால் அவையில் பரபரப்பு உருவானது. தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மீதான உரையின் போது தயாநிதி மாறன், மாநிலத்தை ஆளும் கட்சி குறித்து இது போன்று அவதூறாக பேசக்கூடாது என பாஜகவினர் வலியுறுத்தினர். 

அடிமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்வதே இவர்களின் வேலை என பாஜக அதிமுக கூட்டணி குறித்து தயாநிதி மாறன் பேசியதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம், கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.


 

.