Chennai: சென்னை: தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நலம் சீராக உள்ளதாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
94 வயதான திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் கவலைக்கிடமாக உள்ளதாக இன்று காலை முதல் வதந்திகள் வெளியாயின. இது குறித்து, கோபாலபுரம் இல்லத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த செயல் தலைவர் மு.க ஸ்டாலின், “பொய் தகவல்களை நம்ப வேண்டாம். அவருக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சலுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடல்நிலை சீராக உள்ளது” என்றுத் தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதியன்று, புதிய மூச்சு குழாய் பொருத்தப்படுவதற்காக, திமுக தலவைர் கருணாநிதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை அடுத்து, அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.
கடந்த 2016 - ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், மருந்து ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் கலைஞர் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல், தொண்டை பகுதியில் ஏற்பட்ட தொற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். பின்பு, டிராக்யோஸ்டமி சிகிச்சை மூலம், சுவாச முறை சீர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.