மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சமீபகாலமாக பாஜக குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அதிமுகவுடன் பாஜக இணக்கமாக உள்ளது என்று கூறப்பட்டு வரும் நிலையில் தம்பிதுரை மட்டும் பாஜகவை அடிக்கடி விமர்சித்து வருகிறார். இதனால், அதிமுக அமைச்சர்கள், பாஜக குறித்து தம்பிதுரை பேசுவது அவரின் தனிப்பட்ட கருத்து என்று கூறி வந்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நேற்று பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அரசின் அனைத்து திட்டங்களுமே மக்கள் பயன்பெறும் விதமாக இல்லை என கூறினார். மேலும், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மத்திய, மாநில அரசுகளை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், ஜி.எஸ்.டி மற்றும் ரூபாய் நோட்டு நடவடிக்கை சிறு குறு தொழிலாளர்களை வெகுவாக பாதித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
அதுமட்டுமல்லாது கஜா, தானே, ஓகி உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் மற்றும் பல விஷயங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து 10,000 கோடி நிதி தமிழகத்திற்கு வர வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறையும் காசுக்காக உங்களிடம் பிச்சை எடுக்க வேண்டியுள்ளது என்றார். மேலும், மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை முறையாக மத்திய அரசு அளிக்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா? பாஜக அரசின் அனைத்து திட்டங்களும் தோல்வியடைந்து விட்டன. கொடுத்த வாக்குறுதி எதனையும் பாஜக நிறைவேற்றவில்லை என்று தம்பிதுரை கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு திட்டங்கள் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அப்போது, தம்பிதுரையின் கருத்து, தனிப்பட்ட கருத்தா? அல்லது தமிழக அரசின் கருத்தா? என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், மத்திய அரசின் திட்டங்களால் மாநில அரசுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்புவது மாநில அரசின் கடமை. இதுவே ஜெயலலிதாவின் கொள்கை. ஆகவே நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்துள்ளதும், மத்திய அரசு நிதியை தாமதமாக வழங்குவது குறித்தும், தம்பிதுரை பேசியுள்ளதில் எந்த தவறும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.