This Article is From Apr 26, 2019

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு! சபாநாயகர் திடீர் ஆலோசனை!

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 4 பேருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு! சபாநாயகர் திடீர் ஆலோசனை!

சென்னையில் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபால், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனை செய்து வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவையில் தற்போது அதிமுகவின் பலம் 113 ஆக உள்ளது. அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர்.

இதில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான, கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோரும் அடக்கம். இவர்களில் தனியரசு, கருணாஸ் தவிர மற்றவர்கள் எடப்பாடி அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்.

இதேபோல் சட்டப்பேரவையில், திமுக உறுப்பினர்கள் 88 பேருடன் காங்கிரசில் 8 பேரும், முஸ்லீம் லீக் உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக உள்ளதால் திமுக கூட்டணியின் பலம் 97 ஆக உள்ளது.

இந்நிலையில், காலியாக உள்ள 22 தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதேபோல், மீதமுள்ள 4 தொகுதிக்கும் வரும் மே.19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதன் முடிவுகள் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் அதே நாளில், மே.23ல் அறிவிக்கப்படுகிறது. 22தொகுதி இடைத்தேர்தலை முடிவுகளைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருகிறது.

ஏனெனில், 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக குறைவான தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் பட்சத்தில், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால், அதிமுக முன்னெச்சரிக்கையாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக, சென்னையில் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபால், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனை செய்து வருகின்றனர்.

இதில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களான, அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, தமிமூன் அன்சாரி ஆகியோர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து, ஆலோசனைக்கு பின்னர் இந்த 4 எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.