சவுதி இளரவரசர் முகம்மது பின் சல்மான்
New Delhi: சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மானை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்தித்துப் பேசிய சில நாட்களுக்கு பின்னர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சல்மானை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது.
சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகள், பிராந்திய பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது.
மிக முக்கியமாக ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை சல்மானிடம் அஜித் தோவல் எடுத்துரைத்தார். இந்தியாவின் நிலைப்பாட்டை புரிந்து கொண்டதாக சல்மான் அஜித் தோவலிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தின்போது ஜம்மு காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. இதனால் ஏற்படும் விளைவுகளை தடுப்பதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. காஷ்மீரை வைத்து அரசியல் செய்து வந்த பாகிஸ்தானுக்கு மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை கடும் பின்னடவை ஏற்படுத்தியது.
இதையடுத்து, காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அளவில் எழுப்பி, பாகிஸ்தான் ஆதரவு கேட்டு வருகிறது. இருப்பினும் அதனை சீனா தவிர்த்து மற்ற எந்த நாடும் ஆதரிக்க முன்வரவில்லை.
இந்த நிலையில் அஜித் தோவல் சவுதி இளவரசரை சந்தித்து பேசியுள்ளார். முன்னதாக அவர் அந்நாட்டுதேசிய பாதுகாப்பு ஆலோசகர் முசைத் அல் அய்பானை சந்தித்தார். இருவரும் தேசிய, பிராந்திய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.