டெல்லி மக்களுடன் கலந்துரையாடும் அஜித் தோவல்
ஹைலைட்ஸ்
- வன்முறையால் வடகிழக்கு டெல்லி பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன
- வடகிழக்கு டெல்லியில் தற்போதைய நிலைமை குறித்து அஜித் தோவல் ஆய்வு
- இறைவான் நாடினால் அமைதி திரும்பிவிடும் என்கிறார் தோவல்
New Delhi: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வட கிழக்கு டெல்லியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பைத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஏற்றுக்கொண்டுள்ளார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்ற அவர் அங்குப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், இறைவன் நாடினால் இங்கு அமைதி திரும்பும் என்று கூறினார்.
அஜித் தோவல் கூறுகையில், "தற்போது நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளது. பாதுகாப்புப் படையின் நடவடிக்கை குறித்து மக்கள் திருப்திகரமாக உள்ளனர். சட்டம் ஒழுங்கை காக்கும் அமைப்புகள் மீது முழு நம்பிக்கை உள்ளது. போலீசார் அவர்களது பணியைச் செய்கின்றனர்" என்றார்.
டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவத்திற்கு இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 180க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் நடந்த இந்த வன்முறையில் பல்வேறு கட்டடங்களுக்கும், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் நடைபெற இருந்த பொதுத் தேர்வுகளை சிபிஎஸ்இ வாரியம் தள்ளிவைத்துள்ளது. இதனிடையே, நேற்றிரவு தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், டெல்லி துணை ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு அவர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தினை குறித்து நடந்த வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு உரியப் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு உடனடியாக அளிக்கவேண்டிய சிகிச்சையை உறுதி செய்யுமாறு நள்ளிரவில் நடந்த விசாரணையில், டெல்லி உயர் நீதிமன்றம் போலீசாருக்கு அறிவுறுத்தியது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்துக்கு வெளியே, நேற்று ஜேஎன்யூ மற்றும் ஜாமியா மிலியா மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி கலவரத்துக்குக் காரணமானவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். அதிகாலை 3:30 மணி அளவில் மாணவர்கள் மீது டெல்லி போலீஸ், தண்ணீர் பீய்ச்சி அடிக்கவே அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
டெல்லி வன்முறையைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர சந்திப்பை மேற்கொண்டார். 24 மணி நேரத்தில் அவர் நடத்திய 3வது சந்திப்பு இது. டெல்லியில் நிலவும் அசாதாரண சூழலைத் தொடர்ந்து, தனது கேரள பயணத்தையும் ரத்து செய்தார் அமித்ஷா.
முன்னதாக உள்துறை அமைச்சகம், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவித்தது. இருப்பினும் பலி எண்ணிக்கைத் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருந்தது. மேலும் ராணுவத்தை பணியில் அமர்த்தத் தேவையில்லை என்றும், போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் போதும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
டெல்லியில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து அதற்குச் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் டெல்லி போலீஸின் தலைவரான அமுல்யா பட்நாயக், “உள்துறை அமைச்சகம் எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. எங்களிடம் போதுமான படைபலம் உள்ளது,” என்றார்.