This Article is From Jul 09, 2019

“8 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறவன் ஏழையா..?”- 10% இட ஒதுக்கீடு குறித்து சீமான் அதிரடி

"நம் நாட்டில் 35 ரூபாய்க்கு மேல் ஒருவர், ஒரு நாளைக்கு சம்பாதிக்க முடியுமென்றால், அவர் ஏழை இல்லை. வறுமைக் கோட்டிற்கு மேலே இருப்பவர் என்று கூறுகிறது அரசு"

Advertisement
தமிழ்நாடு Written by

"அதே அரசுதான், 8 லட்சம் ரூபாய்க்குக் கீழ் உனது ஆண்டு வருமானம் இருக்குமேயானால், நீ பணக்காரன் இல்லை, ஏழை என்று சொல்கிறது"

பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவில் உள்ளவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நேற்று அதிமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, விசிக, மதிமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளை எடுத்து வைத்தனர். 

இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள சீமான், “நம் நாட்டில் 35 ரூபாய்க்கு மேல் ஒருவர், ஒரு நாளைக்கு சம்பாதிக்க முடியுமென்றால், அவர் ஏழை இல்லை. வறுமைக் கோட்டிற்கு மேலே இருப்பவர் என்று கூறுகிறது அரசு. அதே அரசுதான், 8 லட்சம் ரூபாய்க்குக் கீழ் உனது ஆண்டு வருமானம் இருக்குமேயானால், நீ பணக்காரன் இல்லை, ஏழை என்று சொல்கிறது. ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய் வருவாய் ஈட்ட வேண்டும் என்றால், ஒரு மாதத்துக்கு 50, 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும். இது எந்த மாதிரியான நடைமுறை” என்று கொதித்தார். (ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய்க்குக் கீழே இருந்தால் அவர்கள், இந்த 10 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது)

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து, “இடஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்கும் கருவி அல்ல; நூற்றாண்டுகளாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கிய உரிமை. தமிழகத்தைப் பொறுத்தவரை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களோ, தலைவர் கலைஞர் அவர்களோ, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களோ - ஏன் மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களோ, இடஒதுக்கீட்டுக் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளவில்லை. எனவே, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களைத் தீர்மானிக்கும் வரையறை நிச்சயமற்றது என்பதையும் கவனத்தில் கொண்டு, சமூக ரீதியாக முன்னேறியவர்களுக்கும் 10%இடஒதுக்கீடு என்பதற்கு செவி சாய்த்து கிட்டத்தட்ட நூறாண்டு காலமாக தமிழகம் காத்து வரும் சமூகநீதிக்கு களங்கம் கற்பிக்க அனுமதிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.

Advertisement

கருத்துக் கேட்புக் கூட்டத்தின் இறுதியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “இந்த 10 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில், சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெறப்பட்டு அதற்கு ஏற்றாற் போல செயல்படுவோம். தமிழகத்தின் சமூக நீதி கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காத வகையில் முடிவெடுக்கப்படும்” என்று கூறினார். 

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் 10% சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக சிபிஐ, காங்கிரஸ், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிகள் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement
Advertisement