என்.டி.ஆர். உடன் சந்திரபாபு நாயுடு
Hyderabad: மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கு தேசம் கூட்டணி வைத்ததற்கு தெலுங்கு தேச கட்சியின் நிறுவனர் என்.டி.ஆர்.-ன் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆந்திராவின் சுயமரியாதையை காக்க என்.டி.ஆர். மறு பிறவி எடுக்க வேண்டும் என அவரது மனைவி லட்சுமி கூறியிருக்கிறர்.
ஆந்திராவில் பிரபல நடிகராக இருந்த என்.டி.ஆர். எனப்படும் என்.டி. ராமாராவ், கடந்த 1982-ல் தெலுங்கு தேச கட்சியை தொடங்கினார். காங்கிரஸ் ஆட்சியை ஆந்திராவில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் என்.டி.ஆர். கட்சியின் நோக்கம். கட்சி தொடங்கப்பட்ட 9 மாதங்களில் என்.டி.ஆர். ஆட்சியையும் பிடித்தார்.
அதற்கு சில மாதங்களுக்கு முன்பாக லட்சுமி பார்வதி என்பவரை என்.டி.ஆர். திருமணம் செய்து கொண்டார். 1995-ல் கட்சிக்குள் கடும் பிரச்னை ஏற்பட்டபோது, லட்சுமிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு உக்கிரத்துடன் செயல்பட்டு, முதல்வர் பதவியையும் பிடித்தார்.
1996-ல் என்.டி.ஆர். காலமானதை தொடர்ந்து லட்சுமி பார்வதி அரசியலை தவிர்த்து அமைதி காத்து வந்தார்.பின்னர் கடந்த 2014-ல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கு தேச கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி தொடங்கப்பட்டது முதல் காங்கிரசுக்கு எதிராக செயல்பட்டு வந்த தெலுங்கு தேசம் தற்போது அக்கட்சியுடனே கூட்டணி அமைத்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு என்.டி.ஆர்.-ன் மனைவி லட்சுமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக என்.டி.ஆர். நினைவிடத்தில் மவுன விரதம் மேற்கொண்ட அவர், “ ஆந்திராவின் சுய மரியாதையை மீட்டெடுக்க என்.டி.ஆர். மறு பிறவி எடுத்து வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
நீண்ட நாள் பகை காரணமாக சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக என்.டி.ஆர்.-ன் மனைவி கொடி பிடித்திருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.