கலவரத்தில் சேதம் அடைந்திருக்கும் வீடுகள்.
ஹைலைட்ஸ்
- 'பாஜக தலைவர்களின் வெறுப்பு பேச்சே வன்முறைக்கு காரணம்' - எதிர்க்கட்சிகள்
- எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழி நடத்துகின்றன என்கிறது ஆளும் பாஜக.
- டெல்லி வன்முறை தொடர்பாக போலீசுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
New Delhi: டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.
சுமார் 4 நாட்களாக வன்முறையாளர்கள் வெறியாட்டம் ஆடினர். இந்த சம்பவத்தில் நாள்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்து வந்தன. தற்போது பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்திருக்கிறது.
வன்முறையில் உயிரிழந்து அடையாளம் காண முடியாத சடலங்களை அரசு மருத்துவமனையில் ஒப்படைக்குமாறு டெல்லி போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி கலவரம் தொடர்பாக 654 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 1,820 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
பாஜக தலைவர்கள் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதுதான் வன்முறைக்குக் காரணம் என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகள் தவறாக வழி நடத்தியதுதான் இத்தனை விளைவுகளுக்கும் காரணம் என்று பாஜக விமர்சித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீசார், கலவரத்தைச் சரியாகக் கையாளவில்லை என்று கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றனர். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் பிப்ரவரி 23-ம்தேதி தொடங்கிய வன்முறை 4 நாட்களுக்கு நீடித்தது.