திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே கன்னியாஸ்திரியின் உடல் கிணற்றில் மிதந்துள்ளது. நீரில் மூழ்கி அவர் உயிரிந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவரது அடிவயிற்றுப் பகுதியில் நாப்தாலின் வில்லைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் அவரது கைகளில் வெட்டுக் காயம் காணப்படுகிறது.
உயிரிழந்தவர் திருவனந்தபுரம் அருகே பதனாபுரம் பகுதியில் செயல்படும் செயின்ட். ஸ்டீபன்ஸ் பள்ளியை நடத்தி வரும் கன்னியாஸ்திரி சூசன் மேத்யூ (வயது 54) என்பது நேற்றுதான் தெரியந்தது. இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரத்திற்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னதாக, கிணற்றை சுற்றிலும் ரத்த துளிகள் காணப்பட்டதாக பள்ளி பணியாளர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த சூசன் கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.
இதற்கிடையே, கன்னியாஸ்திரி உயிரிழப்பை இயற்கைக்கு மாறான (மர்ம) மரணம் என்று போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கான்வென்ட் ஊழியர்கள் சிலரிடம் வாக்கு மூலம் பெற்றுள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)