This Article is From Sep 13, 2018

"கன்னியாஸ்திரி வழக்கு: பிஷப்பை கைது செய்வது குறித்து கேரள போலீஸ்தான் முடிவெடுக்கும்"

2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றச் செயலில் ஆதாரங்களை திரட்டுவது என்பது போலீசாருக்கு மிகவும் சிரமமான பணி என்று நீதிமன்றம் கருத்து

கன்னியாஸ்திரியை கடந்த 2 ஆண்டுகளாக வன்புணர்வு செய்தார் என்று பிஷப் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது

Thiruvananthapuram:

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள பிஷப் ஃபிரான்கோ முலக்காலை கைது செய்வது குறித்து கேரள போலீஸ்தான் முடிவெடுக்கும் என்று கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

கேரள கான்வெண்டில், கடந்த 2014 முதல் 2016 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 13 முறை கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் பிராங்க்கோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் புகார் அளித்து 76 நாட்கள் ஆகியும், வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தங்கிய விடுதியில் உள்ள மற்ற கன்னியாஸ்திரிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கில், பிஷப் பிராங்க்கோவிற்கு எதிரான புகாரை திரும்பப் பெற்றால் 5 கோடி ரூபாய் பணம் தருவதாக பிஷப்பின் உறவினர் தெரிவித்ததாக பாதிக்கபட்ட கன்னியாஸ்திரியின் சகோதரர் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கன்னியாஸ்திரி குடும்பத்தினர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புகாரை திரும்பப் பெறுமாறு கன்னியாஸ்திரியின் குடும்பத்துக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும், பணத்தாசை காட்டப்படுவதாகவும் கூறினார்.

போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 5 மாநிலங்கள் மற்றும் கேரளாவில் 7 மாவட்டங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், கடந்த 45 நாட்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைவிசாரித்த நீதிமன்றம், 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றச்செயலில் ஆதாரங்களை கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம். அவசர கதியில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. பிஷப்பை எப்போது கைது செய்வது என்பது குறித்து கேரள போலீஸ்தான் முடிவெடுக்கும் என்று உத்தரவிட்டது.

வழக்கின் அடுத்த விசாரணை வரும் 24-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

.