டெல்லியைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சுஹாசினி ராஜ் 'நியூயார்க் டைம்ஸ்' நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்
Sabarimala: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற, நியூயார்க் டைம்ஸ் பெண் பத்திரிகையாளர்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசியுள்ளனர்.
இன்று காலை பெண் பத்திரிகையாளர்கள், எதிர்ப்புகளையும் மீறி சபரிமலை கோயிலுக்கு அருகில் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்தவர்கள், பத்திரிகையாளர்கள் கோயிலுக்குள் வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் வேறு வழியின்றி கீழே இறங்கி வர வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
டெல்லியைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சுஹாசினி ராஜ், தனது வெளிநாட்டு நண்பருடன் பல தடைகளையும் மீறி ஐயப்பன் கோயிலுக்கு அருகில் சென்றுள்ளார். ஆனால், அவர்களைப் பார்த்த போராட்டக்காரர்கள், வழி மறித்துள்ளனர். பத்திரிகையாளர்களை திரும்பி போகச் சொல்லும்படி போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் நம்மிடம், ‘ஒரு பெரும் கூட்டம் இருவரையும் தடுத்து நிறுத்தியது. அவர்களுக்கு எதிராக அந்தக் குழு கோஷங்கள் எழுப்பின. இருவரும் கீழே இறங்கி வருவதைத் தவிர வேறு வழி இல்லை. அதனால், அவர்கள் இறங்கிவிட்டனர்’ என்று கூறினார். அவர்கள் மீது கற்கள் ஏறியப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
நேற்று பக்தர்களுக்காக ஐயப்பன் கோயில் திறக்கப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் போலீஸுடன் கை கலப்பில் ஈடுபட்டனர். சில பெண் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். பெண்களைத் தடுக்கும் செயலில் போராட்டக்காரர்களின் பெரும் பகுதியினர் ஈடுபட்டனர். ஊடக நிறுவன வாகனங்கள், பெண் போலீஸாரையும் போராட்டக்காரர்கள் விட்டுவைக்கவில்லை.
சில வாரங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம், அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லலாம் என்று தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. கேரள அரசு, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யாது என்று தெரிவித்துள்ளது. இதனால் தான் மற்ற அமைப்புகள் கேரள அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், நேற்று மாவட்ட நிர்வாகம், சபரிமலையைச் சுற்றி 30 கிலோ மீட்டர் அளவுக்கு 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 24 மணி நேரத்துக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. தடையையும் பொருட்படுத்தாமல் பல போராட்டக்காரர்கள் தொடர்ந்து கூடி வருகின்றனர்.
சபரிமலை பாதுகாப்பு கமிட்டி என்று சொல்லப்படும் அமைப்பு, இன்று மாநிலம் தழுவிய பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் சபரிமலைக்குச் செல்லும் வழியில் இருக்கும் கடைகள் மூடப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த பந்துக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.