அதிமுகவில் இணைய அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுத்ததாக கூறுப்படுவது தவறான தகவல் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
இன்னும் சில மாதங்களில் 2019 மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயராகி வருகின்றன. கூட்டணி பேச்சு வார்த்தைகளும் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. அதேபோல தேர்தலை எந்தவித பிரச்னையுமின்றி நடத்தி முடிக்க தேர்தல் ஆணையமும் வேலைகளை செய்து வருகிறது.
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக நடுவே கூட்டணி உறுதியாகிவிட்டது. அதேபோல், அதிமுக தரப்பில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, நாடாளுமன்ற தேர்தலுக்காக தேசியக் கட்சிகள், மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறியிருந்தார். மேலும் அதிமுகவை விட்டு பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி மீண்டும் கட்சியில் வந்து இணைய வேண்டும் என்றும், அடிப்படையில் இருந்து அவர்கள் கட்சிக்காக உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ஒரு தொண்டன் கூட இக்கட்சியில் தலைவராகவும், முதலமைச்சராகவும் வரலாம். அதற்கான நிலையை எட்டிப்பிடிப்பதற்கான தகுதியையும், திறமையையும் அவர்களே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி பெரும் விவாதமானது, அவர் தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை என்று கூறியது பாஜகவை தான் என்றும், அதிமுகவை விட்டு பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி மீண்டும் கட்சியில் வந்து இணைய வேண்டும் என்று கோரியது டிடிவி தினகரனை தான் என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, டிடிவி தினகரனுக்கு நான் அழைப்பு விடுத்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறான தகவல்.
18 MLAக்களில் பலர் கழகத்தில் மீண்டும் இணைய விரும்புகின்றனர், அவர்களுக்கு அழைப்பு என்றுதான் கூறியிருந்தேன். உண்மைக்கு புறம்பாக பரப்பப்படும் தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.