This Article is From May 02, 2019

உயிர் போகும் நாளில் அதிமுக-வின் கொடி போர்த்துவதே என் லட்சியம்: ஓ.பி.எஸ் உருக்கம்!

என் மீது பரப்பப்படும் அவதூறுகளை, அடுக்காத பொய் குற்றச்சாட்டுகளை கட்சி தொண்டனும் சரி, என் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் தமிழக மக்களும் செவி கொடுத்து ஏற்க மாட்டார்கள்

உயிர் போகும் நாளில் அதிமுக-வின் கொடி போர்த்துவதே என் லட்சியம்: ஓ.பி.எஸ் உருக்கம்!

என் உயிர் போகும் நாளில் அதிமுகவின் கொடி போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக, லட்சியமாக கொண்டு வாழும் இந்த எளியவனை கட்சி மாறப்போகிறேன், வேறு கட்சிக்கு போகப்போகிறேன் என்றெல்லாம் கூறுவது வடிகட்டிய பொய் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ததும், அவர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஓபிஎஸ் உடனிருந்தார். இதுதொடர்பாக அமமுகவின் தங்கத்தமிழ் செல்வன், ஓபிஎஸ் விரைவில் பாஜகவில் இணைந்துவிடுவார். மேலும் தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியையும், அவருக்கு ஆளுநர் பதவியும் கேட்டிருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, 'நான் பாஜகவில் இணையவுள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறுவது முட்டாள்தனமான கருத்து. தர்மயுத்தம் தொடங்கியதிலிருந்து அவர் கருத்துக்கு நான் பதில் சொல்வதே இல்லை என்று கூறினார்.

எனினும், ஒ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைகிறார் என்ற கருத்து வேகமாக பரவி பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அதிமுகவின் ஒரு சாதாரண தொண்டனாக பொதுவாழ்க்கையில் களப் பணியாற்றி பெரியகுளம் நகராட்சி தலைவராகவும், புனிதமிக்க சட்டப்பேரவைக்குள் பாதம் பதிக்கிற வாய்ப்பை வழங்கி, பிறகு அரசியல் சாசனத்தின் பேரில் வருவாய்த்துறை அமைச்சராக, நிதி அமைச்சராக, பொதுப்பணித்துறை அமைச்சராக, இவையாவிற்கும் மேலாக இந்த நாட்டு அரசியலையே தென்னாட்டு பக்கம் திருப்பிக்காட்டிய நான் வணங்கும் தெய்வத் தாயாம் ஜெயலலிதா வீற்றிருந்த முதலமைச்சர் இருக்கையில் 3 முறையும், அதுபோலவே அதிமுகவின் பொருளாளராக ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு மேலாக என்னை அமர்த்தியும், எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்துக்கு இன்று ஒருங்கிணைப்பாளராகவும், ஏராள வாய்ப்புகளை எனக்கு வழங்கி என் கனவிலும் நான் எதிர்பாராத உயரங்களை தந்து ஒரு சாதாரண பெரியகுளத்தை சேர்ந்த பன்னீர்செல்வத்துக்கு இத்தனை பெருமைகளை அள்ளித் தந்த இந்த இயக்கத்தை விட்டு நான் பாஜக.வுக்கு செல்லப்போகிறேன் என்று ஒரு அடுக்காத புரளி அவதூறாக பரப்பப்படுகின்றன.

ஜெயலலிதா அரசியல் ரீதியாக தேர்தல் களத்தில் எதிர்நிலைகள் கொண்ட போதிலும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டு மோடியின் முடிசூட்டு விழாவை மனதார பாராட்டியது மட்டுமல்லாமல் அவரது ஆட்சிக்காலத்தில் மாநிலங்களவையில் பா.ஜ.க. நெருக்கடியான அறுதி பெரும்பான்மையை கொண்டிருந்தபோதும் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த ஏராளமான தீர்மானங்களை அ.தி.மு.க. வின் வலுவான ஆதரவால் நிறைவேற்றி கொடுத்தவர் ஜெயலலிதா.

அதுபோலவே ஜெயலலிதாவின் பதவியேற்பு பட்டாபிஷேகத்துக்கு பாசத்தோடு வந்து கலந்து கொண்டு முன்வரிசையில் நின்று முகம் மலர வாழ்த்தியவர் நரேந்திர மோடி. இப்படி நான் வணங்கும் என் தலைவி மதித்த தலைவர்கள் மீது நானும், எனது இயக்கமும் காட்டுவது எங்கள் தாயின் வழியை பின்பற்றுகிறோம் என்பதையும், அ.தி.மு.க.வின் அரசியல் எதிர்காலத்திற்கு உகந்த முடிவாக இருக்கிறதா என்பதை உரசிப் பார்த்தும், தொண்டர்களிடம் இருந்தும், மக்களிடம் இருந்தும் கருத்துக்களை உள்வாங்கி கொண்டும்தான்.

ஓட்டக்காரத் தேவர் எனும் ஒரு விவசாயியின் மகனாக பிறந்த என்னை பல உச்சங்களில் அமர்த்தி மக்கள் திலகமும், மகராசி தாயும் உயிராக போற்றிய இயக்கத்தை இக்கட்டான காலத்தில் இயக்கத்தை இமையாக காப்பதற்கும், இந்திய அரசியலை இரு இலை இயக்கம் தான் தீர்மானிக்கும் என்கிற பொற்காலத்தை நோக்கி முன்னெடுத்து செல்வதற்கும் எனது ஆயுள் மொத்தத்தையும் நான் அதிமுகவுக்காக ஒப்படைத்து தொண்டாற்றுகிற ஓர் ஊழியன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் உயிர் போகும் நாளில் அதிமுகவின் கொடி போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக, லட்சியமாக கொண்டு வாழும் இந்த எளியவனை கட்சி மாறப்போகிறேன், வேறு கட்சிக்கு போகப்போகிறேன் என்றெல்லாம் வடிகட்டிய பொய்யை வதந்திகளாக்கி அதனை இந்திய விடுதலைக்கு குரல் கொடுத்த ஊடகங்கள் கூட நடுநிலை என்பதை மறந்து யாருக்கோ வால்பிடித்து புரளியால் குறளி வித்தை செய்வதை நினைத்து மிகுந்த வேதனை அடைகிறேன்.

என் மீது பரப்பப்படும் அவதூறுகளை, அடுக்காத பொய் குற்றச்சாட்டுகளை கட்சி தொண்டனும் சரி, என் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் தமிழக மக்களும் செவி கொடுத்து ஏற்க மாட்டார்கள் என்ற எனது ஆழமான நம்பிக்கையையும் இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.