துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நீக்கம், கட்சியில் மற்றவர்களுக்கும் இது ஒரு முன்உதாரணம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுகவின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாடை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தேனி மாவட்டத்தை சேர்ந்த ஓ.ராஜா (பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளின் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழகத்தினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,
தம்பி என்றும் பாராமல் அவர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது நல்ல விஷயம். கட்சி விரோத நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே ஒருவரை நீக்க முடியும் அது தவிர்க்க முடியாதது. ஓ.ராஜா கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது கட்சியில் உள்ள மற்றவர்களுக்கும் ஒரு பாடம்.
மத்திய அரசிடம் இருந்து இது வரை கஜா புயல் நிவாரண தொகை வரவில்லை. மத்திய அரசின் செயல்பாடு மிகுந்த கண்டணத்துக்குறியதும், கவலைக்குறியதுமாக உள்ளது. மாநிலத்தின் உரிமைகளை தான் நாங்கள் கேட்கிறோம். 12 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சரே நேரடியாக ஆய்வு செய்து பிரதமரிடம் 15 ஆயிரம் கோடி நிவாரணம் கோரியுள்ளார்.
அதற்கு அவர்கள் 5 ஆயிரம் கோடியாவது உடனடி நிதியாக கொடுத்திருக்கலாம், 352 கோடி அளித்துள்ளனர். முழுமையான அளவு தொடர் அழுத்தம் அளித்து வருகிறோம். பாராளுமன்றத்திலும் இதுகுறித்து பேசியுள்ளோம். கண்டிப்பாக மத்திய அரசிடம் இருந்து உரிய நிதியை பெற்றே தீர்வோம் என்று அவர் கூறியுள்ளார்.