ஓபிசி இடஒதுக்கீடு; மத்திய அரசு மேல்முறையீடு செய்யாது என நம்புகிறோம்: அமைச்சர் ஜெயக்குமார்
மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மூன்று மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு கோரி திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்விதத் தடையும் இல்லை எனத் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், இதுதொடர்பாக 3 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்து 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். அடுத்த கல்வி ஆண்டு முதல் அதனை அமல்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து அதில் நாம் வழக்குத் தொடுத்தோம். வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி குழு அமைத்து 3 மாதத்தில் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அருமையான ஒரு தீர்ப்பு. இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என்று அதிமுக கருதி பாராட்டுகிறது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு எவ்வித மேல்முறையீடும் செய்யாமல் தீர்ப்பை மதிக்கும் என நம்புகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.