லஞ்சிகரில் உள்ள வேதாந்தா அலுமினிய ஆலை
NEW DELHI: ஒடிசாவில் வேதாந்தா அலுமினிய ஆலைக்கு முன்பு நடந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை எதிர்த்து கடந்த ஆண்டு போராட்டம் வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்து ஓராண்டு முடிவதற்குள் ஒடிசாவில் வேதாந்தா ஆலை எதிர்ப்பு போராட்டமும், அதனால் உயிரிழப்பும் நடந்திருக்கிறது.
இதுகுறித்து வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லஞ்ச்கரில் உள்ள அலுமினிய ஆலை முன்பு நடந்த போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததாகவும், இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எந்த காரணத்திற்காக இந்த போராட்டம் நடைபெற்றது என்பது குறித்த விவரங்கள் ஏதும் வெளிவரவில்லை. உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, வேலை விவகாரம் தொடர்பாக இந்த போராட்டம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.