ஆகஸ்ட் 20 ஆம் தேதி, டெல்லி உயர் நீதிமன்றம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்தது.
ஹைலைட்ஸ்
- பணமோசடி என்பது தேசத்துக்கு எதிரான குற்றமாகும்: அமலாக்கத் துறை
- 'வழக்கின் உண்மைகளை கண்டறிய சிதம்பரம் கைது அவசியம்'
- '2009-க்கு பிறகும் பணமோசடி நடந்து வந்துள்ளது'
New Delhi: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் புதைந்திருக்கும் உண்மைகளைக் கண்டறிய ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வாதாடியுள்ளது அமலாக்கத் துறை. மேலும், ‘பணமோசடி என்பது சமூகத்துக்கு தேசத்துக்கும் எதிரான குற்றம்' என்றும் கருத்து கூறியுள்ளது அமலாக்கத் துறை.
சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் ஏ.எஸ்.போபண்ணா அமர்வுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. அவர்கள் முன்னிலையில் அமலாக்கத் துறை சார்பில், அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜரானார். அவர், “வழக்கு தொடர்பான கோப்புகள், ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை இந்த நேரத்தில் மனுதாரரிடம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. தேசத்துக்கு எதிரான குற்றமான பணமோசடி குறித்து விசாரித்து உண்மைகளைக் கண்டறிய அமலாக்கத் துறைக்கு அனைத்து உரிமைகளும் உண்டு.
இந்த விவகாரத்தில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தொடர்ந்து பண மோசடி செய்யப்பட்டு வந்தது என்பதை காண்பிப்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. எனவே சிதம்பரத்திற்கு எந்தவித பாதுகாப்பையும் வழங்கக் கூடாது. அவரை உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும்” என்று வாதாடினார்.
ஆகஸ்ட் 20 ஆம் தேதி, டெல்லி உயர் நீதிமன்றம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்தது. அதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைகள் இதில் சிதம்பரத்துக்கு எதிர் மனுதாரர்களாக இருக்கின்றன.
தற்போது சிபிஐ, கஸ்டடியில் சிதம்பரம் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு இந்த குற்றம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.