இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஃபனி புயல் குறித்த நிலைமையை பிரதமர் மோடி தீவிரமாக கவனித்து வருகிறார். தீவிர புயலாக மாறி வரும் ஃபனி தாக்கத்தை சமாளிப்பது குறித்து தேசிய நெருக்கடிக்கால மேலாண்மைக் குழுவானது நாளையும் ஆலோசனை மேற்கொள்கிறது.
இந்த ஆலோசனையில் கலந்துகொண்ட தமிழகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரிகள் தங்களது முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உறுதிப்படுத்தியுள்ளனர். மாநில அரசுகள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, முதல் கட்ட தேசிய பேரிடர் நிவாரண நிதியை விடுவிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக மாறியது. ஃபனி எனப் பெயரிடப்பட்ட அந்த புயல், இன்று மாலைக்குள் அதிதீவிரமாக புயலாக வலுப்பெற்று வடமேற்கு பகுதி நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
இந்த புயலினால் தமிழகம் மற்றும் ஆந்திராவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபனி புயல் வடமேற்குத் திசையில் 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும், ஏப்ரல் 30 ஆம் தேதிக்குப் பிறகு வடகிழக்குத் திசை நோக்கி அது நகர ஆரம்பிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ஃபனி புயல் குறித்த நிலைமையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிடச் சொல்லியும் அறிவுறுத்தியுள்ளேன். பாதிக்கப்படும் என்ற எண்ணப்படும் மாநிலங்களுடன் இணைந்து பணி செய்யுமாறும் அவர்களிடம் கூறியுள்ளேன். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலத்துக்காவும் வேண்டிக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
ஃபனி புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் கடற்படையினர் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)