நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 542 இடங்களில் 303 தொகுதிகளை பாஜக மட்டுமே கைப்பற்றியுள்ளது
New Delhi: பாஜக எம்.பி., ஓம் பிர்லாதான், மக்களவையின் அடுத்த சபாநாயகராக பொறுப்பேற்பார் என்று தகவல் வந்துள்ளது. அவரது நியமனத்துக்கு எதிர்க்கட்சிகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஓம் பிர்லா, உள்துறை அமைச்சரும் பாஜக-வின் தலைவருமான அமித்ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது.
லோக்சபா சபாநாயகர் குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், ஓம் பிர்லாவின் மனைவி அமிதா பிர்லா அதை உறுதிபடுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “இது எங்களுக்கு மிகவும் பெருமையான விஷயமாகும். அவரைத் தேர்வு செய்தமைக்கு அமைச்சரவைக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
ஆனால் ஓம் பிர்லாவோ, “எனக்கு எந்த தகவலும் இதுவரை சொல்லப்படவில்லை” என்று முடித்துக் கொண்டார். பிர்லா, பாஜக-வின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜே.பி.நட்டாவை சந்தித்தப் பின்னர் இந்த கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 542 இடங்களில் 303 தொகுதிகளை பாஜக மட்டுமே கைப்பற்றியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 350-ஐத் தாண்டியுள்ளது. அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்துள்ளதால், கூட்டணிக் கட்சியினருக்கு சபாநாயகர் பதவி கொடுக்கப்படவில்லை.
17வது லோக்சபாவின் முதல் கூட்டம் நேற்று ஆரம்பித்தது. அப்போது தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி-க்கள் அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டனர். அதே நேரத்தில் அவையின் சபாநாயகராக யார் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும் நேற்று பேசப்பட்டுள்ளது.
மக்களவையின் சபாநாயகராக இருந்த சுமித்ரா மகாஜனுக்கு 76 வயதாகிறது. வயது மூப்பின் காரணமாக பாஜக தலைமை இந்த முறை அவரைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை.
நேற்று பாஜக எம்.பி., விரேந்திர குமார், இடைக்கால சபாநாயகராக பொறுப்பேற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து விரேந்திர குமார், எம்.பி-க்கள் பொறுப்பேற்றதை முறைபடுத்தினார்.