বাংলায় পড়ুন Read in English
This Article is From Feb 07, 2020

ஜம்மூ காஷ்மீரின் 2 முன்னாள் முதல்வர்கள் புது பிரிவின் கீழ் கைது!

இதில் ஒமர் அப்துல்லா, மாநில விருந்தினர் இல்லமான ஹரி நிவாஸில் தங்கவைக்கப்படுவார். முப்டி, ஸ்ரீநகரில் உள்ள அரசு இல்லத்தில் தங்கவைக்கப்படுவார். 

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • ஆகஸ்ட் 5 முதல் ஒமர், முப்டி வீட்டுச் சிறையில் உள்ளனர்
  • பிஎஸ்ஏ மூலம் தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
  • பரூக் அப்துல்லாவும் பிஎஸ்ஏ மூலம் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Srinagar:

முன்னாள் ஜம்மூ காஷ்மீரின் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்டி ஆகியோர், கடந்த 6 மாதங்களாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சட்டத்தின் மூலம் 3 மாதங்களுக்கு எந்தவித வழக்கும் இல்லாமல் சிறையில் வைத்திருக்கலாம். மேலும், பல முறை கைது நடவடிக்கையை நீட்டவும் முடியும். எதன் அடிப்படையில் இந்தச் சட்டத்திற்குக் கீழ் இருவரும் கைது செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. 

இந்த இருவரைத் தவிர, தேசிய கான்ஃபரன்ஸ் கட்சியைச் சேர்ந்த அலி முகமது சாகர் மற்றும் பிடிபி கட்சியைச் சேர்ந்த சர்தாஜ் மாத்வி ஆகியோரும் பிஎஸ்ஏ சட்டம் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முப்டியின் கைதை அவரது ட்விட்டர் கணக்கை நிர்வகித்து வரும் மகள் இல்திஜா உறுதி செய்துள்ளார்.

இதில் ஒமர் அப்துல்லா, மாநில விருந்தினர் இல்லமான ஹரி நிவாஸில் தங்கவைக்கப்படுவார். முப்டி, ஸ்ரீநகரில் உள்ள அரசு இல்லத்தில் தங்கவைக்கப்படுவார். 

ஒமர் அப்துல்லாவின் தந்தையான ஃபரூக் அப்துல்லா, இதே சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அவரும் ஆகஸ்ட் மாதம் முதல் வீட்டுச் சிறையில்தான் இருக்கிறார். ஃபரூக் மீது, “பொது அமைதியைக் குலைக்கிறார்” என்று குற்றம் சுமத்தப்பட்டு பிஎஸ்ஏ சட்டம் போடப்பட்டது. 

Advertisement

கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய அரசு, ஜம்மூ காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370-ஐ ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவிட்டது. இந்த நடவடிக்கையை எடுக்கும்போதுதான் பல அரசியல் கட்சித் தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தது மத்திய அரசு. அப்போதிலிருந்து இப்போது வரை பலரும் வீட்டுச் சிறையில்தான் உள்ளனர். 

பிஎஸ்ஏ சட்டம் மூலம் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் போன்றவர்கள்தான் கைது செய்யப்படுவார்கள். ஆனால் முன்னாள் முதல்வரும், இன்னாள் எம்பியுமான மக்கள் பிரதிநிதியான ஃபரூக் மீது அச்சட்டம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

பிஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வந்ததே, ஃபரூக் அப்துல்லாவின் தந்தையும், ஜம்மூ காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஷேக் அப்துல்லாதான். தேக்கு மரக் கடத்தல்காரர்களை ஒடுக்கும் நோக்கில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. 

பிஎஸ்ஏ சட்டமானது, எதேச்சதிகார போக்குடையது என்றும், அரசுக்கு கட்டுக்கடங்காத அதிகாரத்தைக் கொடுக்கிறது என்றும் விமர்சிக்கப்பட்டு வருவதாகும். இரண்டு பிரிவுகளுக்குக் கீழ் இச்சட்டம் பயன்படுத்தப்படும். எந்த விசாரணையுமின்றி முதல் பிரிவில் 3 மாத சிறைத் தண்டனையும், இரண்டாவது பிரிவில் விசாரணையின்றி 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்க முடியும். 
 

Advertisement