This Article is From Aug 05, 2019

முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைப்பு! அசாதாரண நிலையில் ஜம்மு காஷ்மீர்!!

ஜம்மு காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதற்றம் காணப்படுகிறது. இதனை மேலும் அதிகப்படுத்தும் வகையில் முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தீவிரவாத அச்சுறுத்தல் பாகிஸ்தான் ராணுவத்தின் சதித்திட்டம் ஆகியவை பதற்றத்திற்கு முக்கிய காரணம்.

ஹைலைட்ஸ்

  • முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
  • மாநிலத்தின் பல இடங்களில் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது
  • இன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது
Srinagar:

ஜம்மு காஷ்மீரில் அதிரடி நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் மூத்த அரசியல் தலைவர் சஜாத் லோன் ஆகியோரை வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. 

இதேபோன்று ஸ்ரீநகரின் பல்வேறு இடங்களில் மொபைல் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. பொதுக் கூட்டங்கள், பேரணி உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. 

ஜம்மு காஷ்மீரில் இருக்கும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவு வந்த நிலையில், முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தில் மாற்றம் ஏதும் செய்யப்படுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 

வீட்டுச் சிறை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களைப் போன்ற பிரதிநிதிகளை எப்படி வீட்டுச் சிறையில் வைக்க முடியும்? ஜம்மு காஷ்மீர் மக்களின் குரல் ஒடுக்கப்படுவதை இந்த உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.' என்று கூறியுள்ளார். 

முன்னதாக சந்திப்பு நடத்திய முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை நீக்கினால் கடும் விளைவுகளை மத்திய அரசு சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

நேற்று காஷ்மீரின் முக்கிய இடங்களில்  பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டன. குறிப்பாக பாகிஸ்தான் வழியே செல்லும் எல்லையில் கண்காணிப்ப தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மொபைல் சேவைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. 

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதுடன், விடுதியில் இருக்கும் மாணவர்களை சொந்த வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் கலந்து கொண்டார்.

இன்று காலை 9.30-க்கு மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்ரீகர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு திரும்புமாறு கடந்த வெள்ளியன்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. காஷ்மீரில் சுமார் 35 ஆயிரம் துணை ராணுவத்தினர் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர். 

அங்கு நடைபெற்று வரும் அதிரடி மாற்றங்கள், காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று சந்தேகிக்கப்படுகிறது. 

.