தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் கட்டணம் இரு மடங்காக உயர்கிறது!
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் கட்டணம் இரு மடங்காக உயர்கிறது
- மூன்று முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது
- பொது போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட வாய்ப்பு
ஊரடங்கிற்கு பிறகு தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கப்படும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதலே ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மூன்று முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அதன் பிறகும் நான்காவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
இதனால், பல்வேறு தொழில்களுக்கு அனுமதி அளித்ததுபோல், பொது போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், தனி மனித இடைவெளியை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதால் பேருந்துகளில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட பயணிகள் அளவைவிட பாதி அளவிலேயே பயணிகளை ஏற்ற முடியும். இதனால் கடும் நஷ்டம் ஏற்படும். எனவே, ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் ஆம்னி பேருந்து இயக்க அனுமதி வழங்கியதும் தற்போது ஒரு கிலோ மீட்டருக்கு 1.60 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், இனி ஒரு கிலோ மீட்டருக்கு 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
மேலும், தமிழக அரசு ஆம்னி பேருந்து இயக்க நெறிமுறைகளை தந்த பிறகே பேருந்து கட்டணம் உயர்வு அமலுக்கு வருவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.