This Article is From Aug 03, 2018

ABP செய்தியாளர்கள் ராஜினாமா, அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பாராளுமன்றத்தில் விவாதம்

நிகழ்ச்சித் தொகுப்பாளர் புன்யா ப்ரசுன் பாஜ்பாய் மற்றும் நிர்வாக ஆசிரியர் மிலிந்த் காண்டேகர் ஆகியோர் ஏபிபி செய்திகள் தொலைக்காட்சியிலிருந்து ராஜினாமா செய்தனர்.

ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர், “ABP செய்தியாளர்கள் வெளியேற்றத்துக்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்றார்.

New Delhi:

ABP நியூஸ் சேனலின் முக்கியச் செய்தியாளர்கள் பணியைவிட்டு நீங்கிய பிரச்சினை இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டது. அப்போது, மோடி அரசை விமர்சித்ததால் அத்தொலைக்காட்சி நிறுவனம் அரசின் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

மக்களவையில் இது பற்றிப் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜுன் கர்கே, “இந்த அரசு பத்திரிகை சுதந்திரத்தை முடக்குகின்றது. கடந்த சில ஆண்டுகளவே இதுபோது நடந்து வருகின்றது. அரசின் பார்வையில் இருந்து விலகி உண்மையை வெளிக்கொணர யாரேனும் முயன்றால் இந்த அரசு அச்சத்துக்குள்ளாகிறது பதற்றமடைகிறது. கருந்து சுதந்திரம் இல்லாத நாட்டில் நாங்கள் எப்படிப் பேசுவது?” என்று கேட்டார்.

இக்குற்றச்சாட்டைக் கடுமையாக மறுத்த மத்திய தகவல் & ஒலிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர், “ஏபிபி செய்திகள் அரசைப் பற்றிய தவறான செய்தியை வெளியிட்டது. இருந்தும் அவர்கள் மீது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏபிபி அச்செய்தியாளர்களை நீக்கியது அவர்களது TRP ரேட்டிங் குறைந்ததன் காரணமாக இருக்கலாம்” என்றார்.

ABP நிகழ்ச்சி நடத்தி வரும் மாஸ்டர்ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில், சத்தீஸ்கரைச் சென்ற ஒரு பெண்மணிக்கு, மோடியுடனான தொலைக்காட்சி உரையாடலின்போது, அரசின் திட்டத்தால் தனது வருமானம் இரட்டிப்பானதாகக் கூறுமாறு பயிற்சி அளிக்கப்பட்டது தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டது. இதனை கடந்த மாதம் மறுப்பதிலும் அமைச்சர் ராத்தோர் ஈடுபட்டிருந்தார்.

இவ்வாரம், நிகழ்ச்சித் தொகுப்பாளர் புன்யா ப்ரசுன் பாஜ்பாய் மற்றும் நிர்வாக ஆசிரியர் மிலிந்த் காண்டேகர் ஆகியோர் ஏபிபி செய்திகள் தொலைக்காட்சியிலிருந்து ராஜினாமா செய்தனர்.

ட்விட்டரில் பலரும் மோடி அரசை விமர்சிக்கும் எபிசோடு ஒளிபரப்பானது முதல், தங்களால் அக்குறிப்பிட்ட நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரத்தில் ஏபிபி சானலைக் காணமுடியவில்லை என்று தெரிவித்தனர்.
 

இதனை ஏர்டெல், டாடா ஸ்கை நிறுவனங்கள் உறுதிசெய்தன. எனினும் சேனல் தரப்பே இதற்குக் காரணம் என்று தெரிவித்தன.
 

இதே விவகாரத்தை மாநிலங்களவையில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரெக் ஓ பிரையன் எழுப்பி இருந்தார். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் ட்விட்டரில் அரசை இதுகுறித்து விளாசி இருந்தார்.

”சுதந்தரமான ஊடகம்தான் மக்களாட்சியின் உயிர்மூச்சு. ஆனால் மோடி அரசு சுதந்தரமான ஊடக நிறுவனங்களை நசுக்குவதில் உறுதியாக இருக்கிறது. ஏபிபி சானலில் இருந்து இரண்டு முன்னணி செய்தியாளர்கள் இரு நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்திருப்பது இதற்கு மேலும் ஒரு சான்று. ஊடகத்தினர் இப்போதே இதற்கெதிராக எழுந்து நிற்கவேண்டும். தாமதமாக எதிர்வினையாற்றிப் பயனில்லை” என்று அவர் பதிவிட்டிருந்தார்.

.