This Article is From Jan 23, 2020

‘CAA பற்றிய விவாதத்துக்கு தயார்’ - சவாலை ஏற்பதாக அமித் ஷாவுக்கு மாயாவதி பதில்!!

குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து விவாதிக்க தயாரா என்று மாயாவதி, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா சவால் விடுத்திருந்தார்.

‘CAA பற்றிய விவாதத்துக்கு தயார்’  - சவாலை ஏற்பதாக அமித் ஷாவுக்கு மாயாவதி பதில்!!

குடியுரிமை சட்டம் குறித்து விவாதிக்க பகுஜன் சமாஜ் கட்சி தயார் என்று அக்கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

Lucknow:

குடியுரிமை சட்டம் குறித்து பொதுவெளியில் விவாதிக்க தயாரா என்று அமித் ஷா மாயாவதி உள்ளிட்டோரிடம் சவால் விடுத்திருந்தார். இதனை தனது கட்சியான பகுஜன் சமாஜ் ஏற்பதாக அதன் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். இதனால் தேசிய அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை சட்டம் குறித்து விவாதிக்க தயாரா என்று மாயாவதி, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு சவால் விடுத்திருந்தார்.

இதற்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் என்ன பதில் அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ட்விட்டரில் முக்கிய பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

குடியுரிமை சட்டதிருத்தம், என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவை நாட்டின் அமைப்பு முறைக்கு சிக்கல் ஏற்படுத்துபவை. இதனை நாடு முழுவதும் மக்கள் எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர். குறிப்பாக இந்த போராட்டங்களில் இளைஞர்களும், பெண்களும் பங்கேற்கின்றனர். இந்த சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் விவாதிக்க பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது. மத்திய அரசு விடுத்திருக்கும் சவாலை நாங்கள் ஏற்கிறோம்.

இவ்வாறு மாயாவதி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் உள்ள முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் மத ரீதியில் அச்சுறுத்தலுக்கு ஆளாகி, அவர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக 2014 டிசம்பர் 31-ம்தேதிக்கு முன்பு வந்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமையை இந்த குடியுரிமை சட்ட திருத்தம் வழங்குகிறது.

இந்த சட்டம் மதத்தின் அடிப்படையில் இருப்பதாகவும், அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாகவும் கூறி போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வருகிறது.

இதேபோன்று தேசிய குடிமக்கள் பதிவேடு எனப்படும் என்.ஆர்.சி.யும் இந்திய முஸ்லிம்களை பாதிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

.